×

கோழிக்கோடு விமான விபத்தில் பலியான விமானி உடல் அரசு மரியாதையுடன் தகனம்

மும்பை: கோழிக்கோடு விமான விபத்தில் பலியான தலைமை விமானி விங் கமாண்டர் தீபக் சாத்தேயின் உடல் முழு அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது. கடந்த வாரம் விமான சிப்பந்திகள் 6 பேர் உட்பட 190 பேருடன் துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம், கேரளாவில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கிய போது விபத்துக்குள்ளானது. இதில் இரு விமானிகள் உட்பட 18 பேர் பலியானார்கள். பலியான தலைமை விமானியான விங் கமாண்டர் தீபக் சாத்தே, மும்பையில் உள்ள சாந்திவலியை சேர்ந்தவர். அவருடைய உடல் கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பையில் சாந்திவலியில் உள்ள தீபக் சாத்தேயின் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவருடைய உடலுக்கு பொதுமக்கள், ஏர் இந்தியா ஊழியர்கள், விமானப்படை வீரர்கள் அஞ்சலி செலுத்தினர். இவருடைய இறுதிச்சடங்கு நேற்று நடந்தது.

இதில் தீபக் சாத்தேயின் தந்தையான ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி பிரிகேடியர் வசந்த் சாத்தே(87), தாயார் நீலா(83) நாக்பூரில் இருந்து வந்து இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர். பெங்களுருவில் இருந்த மனைவி சுஷ்மா, இளைய மகன் தனஞ்சய், அமெரிக்காவில் இருந்து வந்த மூத்த மகன் சாந்தனு ஆகியோரும் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர். நேற்று பிற்பகலில் சாத்தேயின் உடல் ஊர்வலமாக சாந்திவலி மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.  அவருடைய உடலுக்கு மகாராஷ்டிரா அரசின் முழு மரியாதை அளிக்கப்பட்டது. இறுதி ஊர்வலத்தின் போது, பொதுமக்கள் சாலையின் இரண்டு பக்கங்களிலும் நின்று இறுதி மரியாதை செலுத்தினர்.


Tags : pilot ,plane crash ,Kozhikode , Kozhikode, Plane crash, victim pilot, body state courtesy, cremation
× RELATED மூதாட்டியின் ஓட்டை வேறு ஒருவர் போட்டதால் 4 அதிகாரிகள் கைது