×

தாழம்பூர் ஊராட்சியில் ஏரியில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு: கண்டு கொள்ளாத அதிகாரிகள்

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியம், தாழம்பூர் ஊராட்சி ஊரியில் குப்பைகள் கொட்டப்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனை அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்தின் தாழம்பூர் ஊராட்சி, சென்னையை ஒட்டிய வளர்ந்து வரும் புறநகர் பகுதியாக உள்ளது. இங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகளும், வீட்டு மனைப்பிரிவுகளும் இங்கு உருவாகியுள்ளன.
இங்கு கட்டப்பட்டுள்ள வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், கடைகள், ஓட்டல்களில் இருந்து ஊராட்சி பணியாளர்கள் மூலம் கழிவுகள், குப்பைகள் பெறப்படுகின்றன. ஆனால், தாழம்பூர் ஊராட்சியில் இதுவரை திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தவில்லை.

இதனால், வீடுகள், கடைகளில் இருந்து பெறப்படும் குப்பைகள், கழிவுகள் முறையாக தரம் பிரிக்காமல், காரணை கிராமத்துக்கு செல்லும் பிரதான சாலையிலும், அதையொட்டி உள்ள தாழம்பூர் ஏரிப்பகுதிகளிலும் ஊராட்சி பணியாளர்களே கொட்டி செல்கின்றனர். இந்த குப்பையை மாடுகள், நாய்கள், பன்றிகள் தங்களின் உணவுகளை தேடி கிளறுவதால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதுபோல், கொட்டப்படும் குப்பைகள் காற்றில் பறந்து, தெருவில் நடந்து செல்வோர் மீது விழுகிறது. மேலும் இதில் கொசு உற்பத்தியாகி அருகில் உள்ள குடியிருப்புகளில் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. தற்போது உள்ளாட்சி நிர்வாகம் இல்லாமல், அதிகாரிகளின் நேரடி நிர்வாகத்தின் கீழ் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுவதால், தாழம்பூர் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி, திறந்த வெளியிலும், ஏரியிலும் குப்பைகள் கொட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : lake ,Thalampur , Thalampur Panchayat, Lake, Garbage, Sanitary Disorder, Authorities
× RELATED மாணவிக்கு நோய் தொற்று உள்ளதாக கூறி அரை...