×

அன்பை வெளிப்படுத்த இப்படியும் ஒரு நெகிழ்ச்சி: மனைவிக்கு மெழுகு சிலை உருவாக்கி கிரகப்பிரவேசம் கொண்டாடிய கணவன்

பெல்லாரி: காதல், அன்பு, பரஸ்பர நட்பு என்பதெல்லாம் ஒரு அழகான உணர்வு. இரண்டு நண்பர்கள், காதலர்கள், சகோதரர்கள், தம்பதிகள் என்று ஆழமான உறவுகளை வகைப்படுத்தலாம். அதுவும் மனைவி மற்றும் கணவர் இடையேயான உறவு மிகவும் புனிதமானது என்று கூறப்படுகிறது. உண்மையான அன்பை வெளிப்படுத்தும் விதமாக, அவர்களுக்குள் நடக்கும் பரிசு, பாராட்டு பரிமாற்றம் சில நேரங்களில் சமூகத்தில் முன் உதாரணத்தின் வௌிப்பாடாகவே உள்ளன. இன்றைய வாழ்க்கையில், சில கணவர்கள் மனைவிகளை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதை செய்யும் பல நிகழ்வுகளை நாம் கண்டிருக்கிறோம்.

ஆனால், இங்கே ஒரு நபர் தனது மனைவியிடம் மிகுந்த அன்பு வைத்திருக்கிறார். அந்த மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு, சாலை விபத்தில் இறந்தார். சமீபத்தில், அவர் ஒரு புதிய வீட்டைக் கட்டினார். வீட்டின் புகுமனை புகுவிழாவில் தனது மனைவி இல்லையே என்ற ஏக்கம் அவருக்குள் இருந்தது. அதனால், விழாவில் தனது மனைவியை இழக்க விரும்பவில்லை. அதனால், தனது மனைவி போன்ற ஒரு மெழுகு சிலையை உருவாக்கினார். புகுமனை புகுவிழாவில், மனைவியின் மெழுகு சிலையை அலங்கரித்து ஷோபாவில் அமரவைத்தார். நிகழ்ச்சிக்கு வந்த அவரது குடும்ப உறுப்பினர்கள் பிரம்மிப்புடன் பார்த்துவிட்டு அவரை பாராட்டி சென்றனர்.

இந்த சம்பவம் கர்நாடகாவின் பெல்லாரிக்கு அருகிலுள்ள கொப்பல் மாவட்டத்தில் நடந்தது. இங்கு வசிக்கும் நிவாஸ் குப்தா, தனது மனைவி சத்யாமணியை கொண்டாடும் வகையில் மெழுகு சிலையை உருவாக்கி உள்ளார். இதுகுறித்து நிவாஸ் குப்தா கூறுகையில், ‘சில ஆண்டுகளுக்கு முன் நடந்த  விபத்தில் மனைவி இறந்ததால், புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் அவரும் பங்கேற்க வேண்டும் என்று  விரும்பினேன். குடும்பத்தில்  நல்லது கெட்டது என எல்லாவற்றிலும் பங்கேற்றிருந்த மனைவி, இப்போது இல்லை  என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதனாலே, இந்த நிகழ்ச்சியில் அவளும் இருக்க வேண்டும் என்பதால் மெழுகு சிலை வடித்து மகள்கள், உறவுகளுடன் விழா நடத்தினேன்’ என்றார். மனைவியின் மெழுகு சிலையுடன் கணவர் புதுமனை புகுவிழா நடத்திய விழாவை கொண்டாடும் வீடியோ, தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.  நிவாஸ் குப்தாவை சிலர், ‘கலியுக ராமா’ என்று பதிவிட்டு பாராட்டி வருகின்றனர்.

Tags : planetarium , Wife, wax statue, husband celebrating planetarium
× RELATED திருச்சி கோளரங்கத்தில் டிச.3ல் கணித திறனறித் தேர்வு