×

அரவக்குறிச்சி அருகே மூடப்பட்டுள்ள குடோனில் வெடிமருந்து குவியல்?... ஆர்டிஓ தீவிர விசாரணை

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே மூடப்பட்ட ஒரு குடோனில் வெடிமருந்து குவியல் இருப்பதாக பரபரப்பு ஏற்பட்டதால் ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த பண்ணபட்டி அருகே அஞ்சா கவுண்டன்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் காட்டு பகுதியில் கடந்த 5 வருடங்களுக்கு முன் வெடிமருந்து குடோன் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிகிறது. சில ஆண்டுகளிலேயே நிர்வாக காரணங்களால் குடோன் மூடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த குடோனிலிருந்து வெடிமருந்து வெளியே எடுத்து செல்வதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் சுற்றுவட்டார பகுதி மக்கள் வெடிமருந்து குடோனில் வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து பொருள்கள் முற்றிலும் அகற்றப்பட்டதா, இல்லையா என்பது குறித்து அச்சத்துடன் பேசத் துவங்கினர். தகவலறிந்த ஆர்டிஓ பாலசுப்பிரமணி தலைமையில் அரவக்குறிச்சி தாசில்தார் வேலுசாமி மற்றும் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டோர் வெடிமருந்து குடோன் இருந்த பகுதியை ஆய்வு செய்தனர். பின்னர் ஆர்டிஓ பாலசுப்பிரமணி கூறியதாவது: தற்போதைய நிலையில் குடோனில் இருப்பு இருப்பது போல் தெரியவில்லை. இதை வெளியில் எடுத்து செல்வது போன்ற நிகழ்வுகள் நடந்ததாகவும் தெரியவில்லை.

இருந்த போதிலும் சம்பந்தப்பட்ட வெடிமருந்து குடோன் உரிமையாளரை வரவழைத்து பூட்டியிருக்கும் அறைகளை திறந்து பார்த்தால் தான் உண்மை நிலவரம் தெரியவரும் என்றார்.இருப்பினும் குடோனை திறந்து ஆய்வு செய்ய வேண்டும் என டிஆர்ஓ விடம் கோரிக்கை வைத்தனர். உண்மையில் குடோனில் வெடிமருந்து குவியல் உள்ளதா என சோதனை நடத்த குடோன் உரிமையாளரிடம் ஆர்டிஓ மற்றும் போலீசார் விசாரிக்க உள்ளனர்.

Tags : godown ,Aravakurichi ,RTO ,investigation , Aravakurichi, ammunition pile, RTO, intensive investigation
× RELATED செலவிப்நகர், கோலனிமட்டம் சாலையில் மண்...