×

அடிப்படை வசதியின்றி தவிக்கும் கடவாம்பாக்கம் கிராம மக்கள்: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திண்டிவனம்: திண்டிவனம் அருகே கடவாம்பாக்கம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் இன்றி கிராமமக்கள் அவதிப்படுகின்றனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் அருகே உள்ள கடவம்பாக்கம் கிராமத்தில் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இங்குள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து பொதுமக்களுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

இதற்காக அமைக்கப் பட்டுள்ள குடிநீர் குழாய் அருகே வடிகால் வசதி இல்லாததால் தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனை சீரமைக்க அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் இங்குள்ள சுடுகாட்டில் செடி, கொடிகள் படர்ந்துள்ளதால் சடலங்களை எரிப்பதற்கும், அடக்கம் செய்வதற்கும் முடியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர். குடிநீர் கிணறு தூர்வாரப்படாததால் துர்நாற்றம் வீசுகிறது. இதனை தூர்வாரி இரும்பு கம்பிகளால் மூடி அமைத்து தர வேண்டும், இது தவிர 6க்கும் மேற்பட்ட சிண்டெக்ஸ் குடிநீர் தொட்டிகளும் பழுதடைந்துள்ளதால் அவற்றில்குடிநீர் சேமிக்க முடியவில்லை.

இந்த கிராமத்தில் 15 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பொதுக்கழிப்பறை மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. ஆனால் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை புதுப்பித்து விட்டு செல்கிறார்கள். ஆனால் அதனை திறப்பதில்லை. அதனை உடனே திறக்க வேண்டும். கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் பழுதடைந்துள்ளதால் அதனை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும். இது தவிர தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 15 குடும்பத்தினர் வசிக்கின்றனர். அவர்களுக்கு மனைப்பட்டா வழங்கக்கோரி அரசு அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே மேற்கண்ட பிரச்னைகளை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்களை திரட்டி உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தனர்.

Tags : facilities , Basic facilities, Kadavambakkam villagers
× RELATED வாக்குச்சாவடிகள் அடிப்படை வசதிகள்...