×

பல ஆண்டுகளாக தூர்வாராததால் வெண்ணாற்றில் கோரைகள் மண்டி கிடக்கும் அவலம்: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

தஞ்சை: தஞ்சை பள்ளியக்கிராஹாரம் வெண்ணாற்றில் பல ஆண்டுகளாக தூரவாரததால் கோரைகள் மண்டிக்கிடக்கிறது. உடனடியாக போர்க்கால அடிப்படையில் துார் வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை மாவட்டம் கல்லணையில் வெண்ணாறு பிரிகின்றது. இதில் தென்பெரம்பூரில் வெட்டாறு பிரிந்து விடுகிறது. வெண்ணாறு பள்ளியக்கிரஹாரம் வழியாக மன்னார்குடி, திருவாரூர் , நாகை மாவட்டங்கள் வழியாக சுமார் 100 கிமீ தூரத்திற்கு மேல் சென்று கடலில் கலக்கிறது. வெண்ணாறு ஆற்றில் வரும் தண்ணீர் பல ஆயிரம் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், பல ஆயிரம் ஏக்கர் விவாயத்திற்கும் பயன்பெற்று வருகிறது.தஞ்சை பகுதிக்கு தேவையான குடிநீர் ஆதாரத்திற்காக, சில ஆண்டுகளுக்கு முன்பு, கூடலூர் வெண்ணாற்றில் படுகை அணை கட்டப்பட்டது.

கடந்த பல ஆண்டுகளாக தூர் வாராததால், வெண்ணாற்றில் கோரைகள், காட்டாமணக்கு செடிகள் மண்டி காடுபோல் காட்சியளிக்கிறது. மேலும் ஆற்றின் நடுவில் கட்டந்தரையாக மாறி,அதில் கருவேல மரங்கள் முளைத்துள்ளது. தற்போது மேட்டூரிலுள்ள, காவிரி ஆற்றில் அபரிதமாக தண்ணீர் வருவதால், வரும் பெரும்பாலான தண்ணீரை , காவிரி ஆற்றிலும், வெண்ணாற்றில் தான் அதிகமாக திறந்து விடுவார்கள். ஆற்றில் தண்ணீர் வந்தாலும், தூர் வாராததால் வரும் தண்ணீரின் போக்கு மாறி, பக்கவாட்டு கரைகளை உடைத்து, வெண்ணாற்றின் கரையோரங்களில் உள்ள சுங்கான்திடல், பள்ளியக்கிரஹாரம், குலமங்கலம், கூடலூர் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் நிலை கேள்விக்குறியாகும். மேலும் கூடலூரிலுள்ள படுகை அணை உடைந்து விடும்.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தஞ்சை வெண்ணாற்றில் போர்க்கால அடிப்படையில் தூர் வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், வெண்ணாறு 100 கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், 1000 க்கும் மேற்பட்ட ஏக்கர் பாசனத்திற்காகவும் பயனடைந்து வருகிறது, வெண்ணாற்றில் வருடந்தோறும் தூர் வாராததால், கோரைகள் மண்டியது. ஆற்றின் நடுவில் கட்டாந்தரையாக மாறி அதில் கருவேல மரங்கள் முளைத்து விட்டன. இதனால் ஆற்றில் தண்ணீர் வரும்போது, போக்கு மாறி, பக்கவாட்டு கரையை உடைத்து கொண்டு கிராமங்களில் தண்ணீர் புகுந்து விடும் அபாயம் உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வெண்ணாற்றில் வெள்ளம் வந்த போது, குலமங்கலம், கூடலுார் இடையில் கரையை உடைத்து கொண்டு சாலை துண்டிக்கப்பட்டதால், 5 கிராமங்கள் மக்கள் அவதிக்குள்ளானார்கள். இதனால் வெண்ணாற்றின் கரையோரத்திலுள்ள மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக வெண்ணாற்றை துார் வாரி, வரும் தண்ணீரை ஆற்றில் செல்வதற்கான பணிகள் செய்ய வேண்டும் என்றார்.



Tags : river ,reefs ,state , Whitewater reeds, farmers
× RELATED ஸ்ரீநகர் பகுதியில் ஜீலம் ஆற்றில்...