×

சிவகங்கை நகரில் தொடர் விபத்துகளை ஏற்படுத்தும் பள்ளங்கள்: வாகன ஓட்டிகள் அச்சம்

சிவகங்கை: சிவகங்கை நகரில் பல்வேறு சாலைகளில் நடுவே, மற்றும் சாலையின் ஓரங்களில் காணப்படும் பெரிய அளவிலான பள்ளங்களால் தொடர் விபத்துகள் நடந்து வருகின்றன. சிவகங்கை நகரில் அதிகமான மக்கள் பயன்படுத்தக்கூடிய சாலைகளாக மஜீத்ரோடு, போஸ்ரோடு, காந்திவீதி, நேரு பஜார், திருப்பத்தூர் சாலை, ரயில்வே கிராசிங் சாலை உள்ளிட்ட சாலைகள் உள்ளன. இந்த சாலைகள் தான் நகரின் முக்கியமான பகுதிகளை இணைக்க கூடிய சாலைகளாகும். முக்கிய சாலையான காந்தி வீதியில் தார்ச்சாலை பெயர்ந்து மண்சாலையாக காட்சியளிக்கிறது. மரக்கடை வீதி, அரண்மனை அருகில் உள்ள தனியார் ஹோட்டல் எதிர்ப்புறம், வாரச்சந்தை ரோட்டில் தெப்பக்குளம் அருகில் சாலைகள் முற்றிலும் இல்லாத நிலையில் குண்டும் குழியுமாய் காணப்படுகிறது.

இதுபோல் நகர் முழுவதும் பல்வேறு சாலைகளில் சாலையின் சந்திப்புகளில் நீர் செல்வதற்காக சாலையின் கீழே போடப்பட்டுள்ள குழாய்கள்(சிறிய பாலம்) உடைந்து பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றை சரி செய்யாமல் அப்படியே போட்டுள்ளதால் மேலும், மேலும் குழாய்கள் உடைந்து சிறிய அளவிலான சாலைகளாக மாறியுள்ளன. இந்த பள்ளங்களில் அடிக்கடி விபத்து நடந்து வருகிறது. இதனால் டூவீலர் வாகன ஓட்டிகள், நடந்து செல்வோர் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர். மழை பெய்யும் நேரங்களில் சாலைகளின் நடுவே உள்ள குழிகள் தெரியாத நிலையில் உள்ளதால் உயிர்ப்பலி ஏற்படும் அபாயம் உள்ளது. இவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
 
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: சாலைகளின் நடுவே உள்ள பள்ளத்தால் விபத்துகள் நடந்து வரும் நிலையிலும் அவற்றை சரி செய்வதில் மெத்தனம் காட்டப்படுகிறது. மழைக்காலங்களில் இந்த பள்ளங்களில் ஆட்கள் நடந்து சென்று உள்ளே விழுந்தால் கூட தெரியாது. சாலையின் நடுவே உள்ள பள்ளங்கள் ஆண்டுக்கணக்கில் இருந்தும் தொடர் புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளப்படாமல் உள்ளன. உடனடியாக இவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : accidents ,Motorists ,Sivagangai ,accident , Sivagangai, serial accident, ditches
× RELATED திருக்கோவிலூர் அருகே இருவேறு...