×

நொய்யல் நீரை குளங்களுக்கு கொண்டு செல்ல வாய்க்கால் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

காங்கயம்: நொய்யல் ஆற்று நீரை குளங்களுக்கு கொண்டு செல்லும் வகையில் வாய்க்கால் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலைகளில் உற்பத்தியாகும் நொய்யல் ஆற்றின் மூலம் 31 குளங்கள் பயன்பெறும் வகையில் 23 தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், குளங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. கடந்த 2000ம் ஆண்டுக்கு பின் திருப்பூர் சாயபட்டறைகள் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் நொய்யல் ஆற்றில் திறந்து விட்டதால் காவிரி வரை நிலம், நீர் கெட்டு போனது.

இதைத்தொடர்ந்து, விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 7 குளங்களுக்கு செல்லும் வாய்க்கால்கள் அடைக்கப்பட்டது. கடந்த 2010ம் ஆண்டுக்கு பின் அனைத்து சாயமேற்றும் ஆலைகளும் ஜீரோ டிஸ்சார்ஜ் முறையில் சாயநீரை சுத்தப்படுத்தி வருவதால் நொய்யல் ஆற்றில் பருவமழை காலங்களில் ஓரளவு நல்ல தண்ணீர் ஓடுகிறது. இவ்வாறு வரும் மழைநீரை சாமளாபுரம், ஆண்டிபாளையம், மாணிக்காபுரம், அணைப்பாளையம் மற்றும் கத்தாங்கன்னி உள்ளிட்ட குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வதன்மூலம் விவசாயம் நடந்து வந்தது.

இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட நொய்யலாறு சீரமைப்பு திட்டத்தில் ரூ.230 கோடி நிதி ஒதுக்கப்பட்டு தடுப்பணைகளை சீரமைத்தல், கரைகளை பலப்படுத்துதல் மற்றும் வழுக்கு வாய்க்கால்களை கான்கிரீட் தளமாக மாற்றும் பணிகள் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, திருப்பூர் மாவட்டத்தில் ஆண்டிபாளையம், மண்ணரை, மாணிக்காபுரம், ஊத்துக்குளி அணைப்பாளையம் மற்றும் கத்தாங்கன்னி குளங்களுக்கு செல்லும் வழங்கு வாய்க்கால்களை கான்கிரீட் தளமாக்கும் பணிகளும் நடந்து வருகிறது.

இப்பணிகள் மந்தகதியில் நடப்பதால் நொய்யல் ஆற்றில் செல்லும் வெள்ளநீரை குளங்களுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது நொய்யல் ஆற்றில் சுத்தமான மழைநீர் செல்லும் நிலையில், பணிகளை விரைந்து முடித்து மழைநீரை குளங்களுக்கு திறக்க வேண்டும் என நொய்யல் பகுதி விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags : Disease, drainage rehabilitation work, farmers
× RELATED திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும்...