×

புதுக்கோட்டை அருகே கட்டைப்பையில் வைத்து வீசப்பட்ட பச்சிளம் குழந்தை!: இரக்கமற்ற செயலை செய்தது யார்? அதிகாரிகள் விசாரணை..!!

புதுக்கோட்டை:  புதுக்கோட்டை அருகே கட்டைப்பைக்குள் வைத்து பச்சிளம் குழந்தை வீசப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிறந்தவுடன் கட்டைப்பையில் வைத்து வீசும் அளவிற்கு என்ன தவறு செய்தேன் என கேட்கும் அளவிற்கு இருக்கிறது இப்பச்சிளம் குழந்தையின் அழுகுரல். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே ஆலடிகொல்லையில் பேருந்து நிலையத்தில் இருந்து வந்த அழுகுரலை கேட்டு திடுக்கிட்டார் அவ்வழியே சென்ற மூதாட்டி ஒருவர். பேருந்து நிறுத்தத்திற்குள் சென்று பார்த்தபோது கட்டைப்பை ஒன்றுக்குள் பச்சிளம் சிசு கதறி கொண்டிருந்தது.

பிறந்து சிலமணி நேரமே ஆன அந்த ஆண் குழந்தை கட்டைப்பைக்குள் வைத்து வீசப்பட்டிருப்பதை கண்டு பதறிப்போன மூதாட்டி, இளைஞர்கள் உதவியுடன் குழந்தையை மீட்டார். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த அதிகாரிகள் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தைக்கு தேவையான பால், கொசுவலை போன்றவற்றை இளைஞர்கள் வாங்கி கொடுத்தனர். யாரோ பெற்ற பிள்ளைக்கு ஆலடிகொல்லையை சேர்ந்த பெண்கள் பாசத்தோடு பாலை புகட்டினர். மருத்துவப் பணியாளர்கள் குழந்தையை அக்கறையோடு கவனித்துக் கொண்டனர். குழந்தை நலமுடன் இருப்பதாக தெரிவித்த அதிகாரிகள் பச்சிளம் குழந்தையை வீசி சென்றவர்களை தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டையில் மட்டுமல்ல ராணிப்பேட்டை மற்றும் திருப்பூரிலும் நெஞ்சில் இரக்கமின்றி பிஞ்சி குழந்தையை வீசி சென்றிருக்கிறார்கள். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வன்னிவேடு என்ற இடத்தில் அகத்தீஸ்வரன் ஆலயம் முன்பு பிறந்து 1 மாதமே ஆன குழந்தை மீட்கப்பட்டது. பிள்ளை வரம் கேட்டு கோயில் கோயிலாக சுற்றுபவர்கள் மத்தியில் அந்த கோயில் வாசலிலேயே குழந்தையை போட்டு சென்ற கல்மனதுகாரர்கள் யார் என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல திருப்பூர் மாவட்டம் பலவஞ்சி பாளையத்தில் பிறந்து 5 நாட்களே ஆன பெண் சிசு குப்பை தொட்டியில் வீசப்பட்டுள்ளது. குழலோசையினிது, யாழோசையினிதென்று சொல்லுவர் தம் மக்களது மழலை  சொற்களை கேளாதவர் என ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவன் கூறிய வாக்கு குழந்தைகளை வீசி சென்றவர்களின் செவிகளில் போலும்.

Tags : Pudukkottai , Green child ,bundle, Pudukkottai ,ruthless act, Authorities,investigating
× RELATED கடத்தப்பட்ட குழந்தை மீட்பு