×

கொரோனாவுக்கு பயந்து சட்டவிரோதமாக ஏலகிரி மலை ரிசார்ட்டுகளில் தங்கியுள்ளவர்களால் கொரோனா தொற்று: 10க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் சட்டவிரோதமாக பல்வேறு மாநில மற்றும் மாவட்டங்களிலிருந்து தப்பி வந்தவர்கள், ரிசார்ட்டுகள், மற்றும் தனியார் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கொரோனா வைரஸ் நோய் எதிரொலியாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் சுற்றுலா தலங்களுக்கு யாரும் வரக்கூடாது என்று தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் சுற்றுலாதலமான ஏலகிரி மலைக்கும் யாரும் வராமல் இருந்தனர்.

இதனால் ஏலகிரி மலையில் படகு சவாரி, இயற்கை பூங்கா, ஓட்டல்கள், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்டவை வியாபாரம் இல்லாமல் பொலிவிழந்து காணப்பட்டது. மேலும் இங்கு பணியாற்றி வந்த வடமாநில இளைஞர்கள் மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஊழியர்கள் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஏலகிரி மலைக்கு சென்னை, பெங்களூரு மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் ஏலகிரி மலைக்கு வந்து இங்கு தனியாக உள்ள ரிசார்ட்டுகள் மற்றும் விடுதிகளில் மற்றும் தனியார் ஓட்டல்களில் பலர் தங்கியுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

6 மாதங்கள் ஆகியும் ஒருவர் கூட தொற்று இல்லாத நிலையில் தற்போது ஏலகிரி மலை பகுதியில் 10க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல ஏலகிரி மலை பொன்னேரி மலை அடிவாரத்தில் காவல்துறை சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை சாவடியில் யாரும் கண்டுகொள்ளாததால் இரவு 12 மணிக்குமேல் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் இங்கு வந்து தற்போது குடிபெயர்ந்து உள்ளனர். மாவட்ட காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இதனை தடுத்து நிறுத்தி ஏலகிரி மலை பகுதியில் தொற்று இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்றும் மலைவாழ் மக்களும் அப்பகுதி மக்களும் கூறுகின்றனர்.

இதுகுறித்து எஸ்பி விஜயகுமார் தினகரன் நிருபரிடம் கூறியதாவது: தற்போது ஊரடங்கு காரணமாக காவல்துறை சார்பில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மீறி யாரேனும் வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து இங்கு தங்க வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் இரவு நேரங்களில் போலீசுக்கு தெரியாமல் வந்து அங்கு தங்கி இருந்தாலும் தனியார் ஓட்டல்கள், விடுதிகள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் திருப்பத்தூர் மாவட்ட மக்கள் மட்டும் ஏலகிரி மலைக்கு சென்று வரலாம்.  அதேபோல் ஏலகிரி மலையில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு பொதுமக்கள் செல்ல அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தவறாக பயன்படுத்திக் கொண்டு யாராவது வெளிநபர்கள் இங்கு வந்து தங்கி இருந்தாலோ அல்லது நோய் தொற்று காரணமாக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதனை கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை ஒன்றிணைந்து அவர்கள் எந்தெந்த பகுதிகளில் தங்கி உள்ளார்கள் என்று கணக்கெடுக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

அப்படி வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து தங்கியிருந்தால் அவர்களை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வந்து தங்கி இருப்பவர்கள் குறித்து பொதுமக்கள் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : hill resorts ,Corona ,Yelagiri , Corona, Yelagiri Hill, Resorts, Corona
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...