×

13, 14வது கொண்டை ஊசி வளைவு: ஏற்காடு பாதையில் மண் சரிவு: சாலைகள் தரமற்று அமைப்பதாக குற்றச்சாட்டு

ஏற்காடு: ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், 13 மற்றும் 14வது கொண்டை ஊசி வளைவில் மண்சரிவு ஏற்பட்டது. மலைப்பாதையில் சாலை தரமின்றி அமைக்கப்படுவதால், அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஏற்காட்டில் கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், பூமி குளிர்ந்து மண் இறுக்கம் குறைந்து இளகியுள்ளது. நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், ஏற்காடு மலைப்பாதையில் 13 மற்றும் 14வது கொண்டை ஊசி வளைவில் மண்சரிவு ஏற்பட்டு, சாலையின் நடுவே கற்கள் விழுந்தன.

இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறையினர், நேற்று காலை கற்களை அப்புறப்படுத்தினர். மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டதையடுத்து, தற்காலிகமாக சாலையை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், ஏற்காட்டில் புதிதாக மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகள் தரமாக இல்லாததால், சாலையில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. தற்போது, ஊரடங்கு காரணமாக வாகனங்கள் இயக்கப்படாததால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால், ஊரடங்கு முடிந்து வழக்கம் போல் வாகனங்கள் இயக்கப்படும் போது, பெரும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, ஏற்காட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து, தரமற்ற சாலைகள் அமைத்த ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலத்தில் கேரளா மற்றும் நீலகிரி மலைப்பகுதிகளில் நிலச்சரிவால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு, மண்அரிப்பு ஏற்படாத வகையில், சாலைகளை தரமாக அமைக்க வேண்டும் என நீலமலைத் தோட்டத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் நல்லமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags : roads ,road ,Landslide ,Yercaud ,Kondai Uchi , Needle curve, Yercaud, landslide
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி