×

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரிப்பு: ஐந்தருவி படகு குழாம் நிரம்பியும் ஊரடங்கால் துவங்கப்படாத சவாரி

தென்காசி:  குற்றாலத்தில் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக ஐந்தருவி படகு குழாமில் தண்ணீர் முழுமையாக நிரம்பி உள்ளது. இருப்பினும் நோய் தொற்று காரணமாக படகு சவாரி துவங்கவில்லை.  குற்றாலத்தில் இந்த ஆண்டு ஜூன், ஜூலை ஆகிய 2 மாதங்களும் சீசன் சரியாக இல்லாத நிலையில், ஆகஸ்ட் மாதத்தின் துவக்கத்தில் இருந்து சீசன் நன்றாக உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து சாரல் பெய்து வருகிறது. நேற்று பகலில் வெயில் இல்லை. இதமான காற்று வீசியது. அவ்வப்போது மேகமூட்டம் காணப்பட்டது. லேசான சாரல் தூறியது.

மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் பரந்து விழுகிறது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. மேலும் குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பொழுதுபோக்கும் அம்சமாக படகுசவாரி திகழ்கிறது. குற்றாலத்தில் இருந்து ஐந்தருவி செல்லும் வழியில் வெண்ணைமடை குளத்தில்
ஆண்டுதோறும் சுற்றுலாத்துறையின் தமிழ்நாடு ஓட்டல் நிர்வாகம் சார்பில் படகு சவாரி விடுவது வழக்கம். 2 இருக்கை படகுகள், 4 இருக்கை படகுகள், மிதிபடகுகள், துடுப்பு படகுகள் தனிநபர் படகுகள் என 30க்கும் மேற்பட்ட படகுகள் இயக்கப்படும்.

தமிழ்நாடு ஓட்டல் நிர்வாகத்திற்கு படகு சவாரி மூலம் 2017ம் ஆண்டு ரூ.3 லட்சத்து 38 ஆயிரம், 2018ம் ஆண்டு ரூ.7 லட்சத்து 38 ஆயிரம், 2019ம் ஆண்டு ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் வருவாய் கிடைத்துள்ளது. இந்தாண்டு ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் சீசன் சரிவர இல்லாததால் ஆகஸ்ட் மாதத்தில்தான் படகு குழாம் நிரம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது நோய் தொற்று காலமாக இருப்பதால் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. அதேபோல் தற்போது படகு குழாமில் தண்ணீர் நிரம்பிய போதும் படகு சவாரியும் தொடங்கப்படவில்லை.

Tags : waterfalls ,Courtallam ,boat crew , Courtallam, waterfalls, five-row boat crew, curfew
× RELATED சுருளி அருவியில் குறைந்த நீரில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்