×

அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே திடீர் துப்பாக்கிச்சூடு..: உலகம் வாழ்வதற்கு அபாயகரமான பகுதியாக உள்ளதாக அதிபர் டிரம்ப் கருத்து

வாஷிங்டன்: அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு வெளியே மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூடு காரணமாக அதிபர் டொனால்டு டிரம்ப்பின் பத்திரிக்கையாளர் சந்திப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்தார். ஆனால், செய்தியாளர் சந்திப்பின் பாதியில் திடீரென அமெரிக்க சீக்ரெட் சர்வீஸ் ஏஜெண்டுகள் ஓடிச் சென்று, அவரை சுற்றி சூழ்ந்து கொண்டு, திடீரென உள்ளே அழைத்துச்சென்றனர். அங்கிருந்த பத்திரிக்கையாளர்களுக்கு என்ன நடக்கிறது என்பது முதலில் புரியவில்லை. ஆனால், சில நிமிடங்களுக்கு பிறகு மறுபடியும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் அதிபர் டொனால்டு டிரம்ப் தோன்றினார்.

 அப்போது அவர், வெள்ளை மாளிகையின் வெளியே துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றதாகவும், எனவேதான் பாதுகாவலர்கள் தன்னை அழைத்துச் சென்றதாகவும் விளக்கமளித்தார். மேலும், பேசிய அவர், துரதிர்ஷ்டவசமாக இதுதான் உலகமாக இருக்கிறது, ஆனால் உலகம் எப்போதும் ஆபத்தான ஓர் இடமாகவே உள்ளது. உலகம் ஏதோ தனிச்சிறப்பான இடமாக இல்லை. நூற்றாண்டுகளைத் திரும்பிப் பார்த்தோமானால் உலகம் வாழ்வதற்கு எவ்வளவு அபாயகரமான பகுதியாக உள்ளது, மிகவும் ஆபத்தான ஒன்றாக உலகம் உள்ளது. தொடர்ந்து ஒரு காலக்கட்டம் வரை இப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது. துப்பாக்கிச்சூடு நடத்தியவர் யார்? அவரது நோக்கம் என்ன என்பது பற்றி எனக்கு தெரியாது. எனக்கு கிடைத்த தகவல் படி ஆயுதங்களுடன் அந்த நபர் வந்துள்ளார். ஒருவேளை அவர் என்னை குறிவைத்து தாக்கும் நோக்கத்துடன் வந்திருக்காமல் இருக்கலாம். ஏனெனில், வெள்ளை மாளிகைக்கு வெளியே இந்த சம்பவம் நடந்துள்ளது.

வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக நான் கருதவில்லை. என் பாதுகாவலர்கள் மிகச்சிறப்பானவர்கள். இவர்களுக்கு உயர்மட்ட பயிற்சி உள்ளது. இவர்கள் என்னைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். மீண்டும் செய்தியாளர்களைச் சந்திப்பேன் என்று நினைக்கவில்லை. நிறைய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர், என கூறியுள்ளார். இதனிடையே சீக்ரெட் சர்வீஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 17வது தெரு மற்றும் பென்சில்வேனியா அவே பகுதியில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகவும், தங்கள் அதிகாரிகள் அந்த மர்ம நபரை சுட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள், சந்தேகப்படும் அந்த குற்றவாளி மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். அந்த குற்றவாளி தற்போது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார் என்று காவல்துறை விளக்கமளித்துள்ளது.



Tags : Trump ,shooting ,White House ,US , America, White House, shooting, President Trump
× RELATED அமெரிக்காவில் ஆபாச பட நடிகைக்கு பணம்...