×

ஊரடங்கில் வியாபாரம், நட்பு, உறவுகளை காணொலி மூலம் சந்திக்க வைக்கும் ‘ஜூம்’: அமெரிக்காவுக்கு அடுத்ததாக இந்தியாவில் அதிக மவுசு

சென்னை: கொரோனா ஊரடங்கு என்ற பெரிய பிரச்னை இருந்தாலும் ஜூம் செயலி மூலம் நேரடியாக இருந்த இடத்தில் இருந்தே பாடம், வியாபாரம், நலம் விசாரிப்பு என்று ஒரு பெரிய பாலமாக பொதுமக்கள் மத்தியில் மாறி உள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்ததாக இந்தியாவில் ‘ஜூம்’ செயலி அதிக வரவேற்பு பெற்றுள்ளது. ஒட்டுமொத்த உலகையே முடக்கி போட்டுள்ள கொரோனாவால், தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்கள் தங்களது கருத்து பரிமாற்றங்களை செய்து வருகின்றனர். அதன்படி, ‘ஜூம் ஆப்’ என்ற செயலி மூலம் வீடியோ கான்பரன்சிங், செமினார் உள்ளிட்டவை நடக்கின்றன.

நாட்டின் பிரதமர் முதல் அமைச்சர்கள், மாணவர்கள் வரை காணொலி காட்சி மூலம் உரையாடல்கள், அரசியல் கட்சிக் கூட்டங்கள், அனைத்துக் கட்சி கூட்டங்கள், கார்ப்பரேட் கூட்டங்கள், யோகா வகுப்புகள், தனிநபர் திறன் வகுப்புகள், பள்ளிக் கல்லூரி வகுப்புகள் என அனைத்தும் நடைபெறுகிறது. ‘ஜூம்’ நிறுவனம் அமெரிக்காவில் சான் ஜோஸ் நகரைத் தலைமையிடமாக கொண்டு இயங்குகிறது. ஜூம் நிறுவனத்துக்கு இந்தியா, இங்கிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் 21 அலுவலகங்கள் இருக்கின்றன. உலகம் முழுக்க 18 தகவல் மையங்களையும் வைத்திருக்கிறது. தற்போது பெங்களூருவில் பிரத்யேக தொழில்நுட்ப மையத்தை அமைக்கவும் ஜூம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய நிலையில் காணொலி காட்சி சந்திப்புகளில் ‘ஜூம்’ ஆப் உபயோகம் சர்வதேச அளவில் முக்கிய பங்கு வகிக்கிறது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ‘ஜூம்’ நிறுவனத்தின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா இருப்பதாக அதன் தலைமை செயலதிகாரி எரிக் எஸ்.யுவான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, இந்திய - அமெரிக்க தொழில் முனைவோர் நடத்திய கூட்டத்தில் பேசிய எரிக் எஸ்.யுவான், ‘இந்திய ஜூம் ஆப் பயனர்களிடம் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாதான் இருக்கிறது. அடுத்தடுத்த இடங்களில் ஜப்பான், இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகள் இருக்கின்றன.இந்தியாவில் ஜூம் திருமண கொண்டாட்டங்கள் மிகவும் பிரபலமாகி வருகின்றன. சிறு குழந்தைகள் முதல் தாத்தா பாட்டி வரை அனைவரும் இந்தியாவில் ஜூம் பயன்படுத்துகிறார்கள்.

அமெரிக்காவில், இப்போது ஜூம் மூலம் நடத்தப்படும் திருமணங்கள் சட்டபூர்வமானவை என்றும், இதனை ‘ஜூம் திருமணம்’ என்றும் அழைக்கின்றனர். கொரோனா வைரஸ் ஊரடங்கால், வீட்டிலிருந்து வேலை செய்வது பலருக்கு விருப்பமாகி வருகிறது. அதுவே எதிர்காலத்தில் பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்கு நம்மை உருவாக்கும். வருகிற 2040ம் ஆண்டில், செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள் மொழிபெயர்ப்பில் புதிய இலக்குகளை எட்டும். வீடியோ தகவல் தொடர்புகள் மூலம்,  மற்றவர்களின் நெருக்கத்தை உணரவும், கைகுலுக்கவும், உணரவும் விரும்புகிறேன். இந்த அம்சங்கள் எதிர்காலத்தில் நடக்கலாம். நீங்கள் வைத்திருக்கும் காபியை, நான் சுவாசித்து உணர முடியும். எதிர்காலத்தில் அப்படித்தான் வாழப் போகிறோம்’ என்றார். அமெரிக்காவில், இப்போது ஜூம் மூலம் நடத்தப்படும் திருமணங்கள் சட்டபூர்வமானவை என்றும், இதனை ‘ஜூம் திருமணம்’ என்றும் அழைக்கின்றனர்.

Tags : United States ,India , Business, Friendship, Relationship Video, Meet, ‘Zoom’, USA, India, More
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்