×

ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் நடத்த அனுமதி அளித்துள்ளதையடுத்து நேற்று அரசாணை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் செயல்படுதற்கான அரசாணை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது. அதில், தமிழகத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளை திறக்கக் கூடாது. மேலும் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைப்பிடிப்பது போன்றவை பின்பற்றப்படுகிறதா? என்பதை கவனிக்க வேண்டும். மேலும், 65 வயதைக் கடந்தவர்கள், வேறு நோய்வாய்ப்பட்டவர்கள், கர்ப்பிணிகள் ஓட்டுநர் பயிற்சி பெறச் செல்ல வேண்டாம்.

அனைத்து பயிற்சிப் பள்ளிகளிலும் சானிடைசர், உடல் வெப்ப சோதனைக் கருவி வைக்கப்பட்டு இருக்க வேண்டும். அங்கு வரும் ஒவ்வொருவருக்கும் தினமும் உடல் வெப்பம் சோதிக்கப்பட வேண்டும். அவர்களின் செல்போன் எண், ஆதார் எண் ஆகியவை தனிப்பதிவேட்டில் குறிக்கப்பட வேண்டும். அந்தப் பதிவேடு அரசின் ஆய்வுப் பணி அலுவலர்களிடம் காட்டப்பட வேண்டும். அதைப்போன்று சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். வகுப்பறைகளில் நீண்ட நேரம் பாடம் நடத்த வேண்டாம். பாடங்களை வாசித்து தெரிந்து கொள்ளும் வகையில் வைக்க வேண்டும். முடிந்தவரை பாடங்களை ஆன்லைனில் நடத்தலாம்.  பயிற்சி பெற வருகிறவர்கள், பயிற்சியாளர் அனைவரும் ஆரோக்கிய சேது செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருக்கும் ஊழியர்கள் யாரும் பயிற்சி பள்ளிக்கு வர வேண்டாம். பணப்பரிமாற்றம் இல்லாத வகையில் கட்டணங்களை வசூலிக்க வேண்டும். 65 வயது கடந்த பணியாளர்கள், கர்ப்பிணிப் பணியாளர்கள், நோய்வாய்ப்பட்டிருக்கும் பணியாளர்கள் பணிக்கு வராமல் இருப்பது நல்லது. யாருக்காவது தொற்று அறிகுறி தென்பட்டால் உடனடியாக அவர்களை தனிமைப்படுத்தி, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். கார் ஓட்டும் பயிற்சியின் போது ஏசி போடக் கூடாது. ஜன்னல்களைத் திறந்து வைக்க வேண்டும். பயிற்சியாளர் மற்றும் 2 பேர் மட்டுமே ஒரு நேரத்தில் காரில் இருக்க வேண்டும். கையுறைகளை அனைவரும் அணிய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Driving Schools ,Government of Tamil Nadu , Driving School, Guidelines, Publication, Government of Tamil Nadu
× RELATED சபாநாயகர் புதிய நோட்டீசை எதிர்த்த மனு நாளை ஐகோர்ட்டில் விசாரணை