×

இந்தி ஏகாதிபத்தியத்தை வேரோடு சாய்க்க தமிழகம் எவ்வித தியாகத்துக்கும் தயார்: வைகோ அறிக்கை

சென்னை: இந்தி ஏகாதிபத்தியத்தை வேரோடு சாய்க்க தமிழகம் எவ்வித தியாகத்துக்கும் தயார் என்று வைகோ கூறியுள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி புறப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்புச் சோதனையை முடித்துச் செல்லும்போது, அங்கு பணியில் இருந்த மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை பெண் அதிகாரி ஒருவர் கொரோனா நடவடிக்கைகள் குறித்து, கனிமொழியிடம் இந்தி மொழியில் உரையாடி இருக்கிறார். அதற்குக் கனிமொழி எம்.பி., எனக்கு இந்தி புரியவில்லை. எனவே தமிழ் அல்லது ஆங்கில மொழியில் பேசுங்கள் என்று கூறியுள்ளார். இதற்கு அந்தப் பெண் அதிகாரி கனிமொழியைப் பார்த்து, ‘நீங்கள் இந்தியரா?’ என்று கேள்வி எழுப்பி இருக்கின்றார்.

இந்த நிகழ்வை கனிமொழி தனது டிவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியதால், சமூக வலைதளங்களில் சி.ஐ.எஸ்.எப். பெண் அதிகாரி மீது கண்டனக் கணைகள் பாய்ந்தன. இது தற்செயலானது என்றோ, தெரியாமல் கேட்டுவிட்டார் என்றோ கடந்து போய்விட முடியாது. இவ்வாறு இந்தி மொழிதான் ஆட்சி மொழி, அலுவல் மொழி என்பதை வலிந்து நிலைநாட்ட பாஜ அரசு தொடர்ச்சியாக முயன்று வருகிறது. அதன் உச்சமாக தற்போது இந்தி, சமஸ்கிருத மொழிகளைத் திணிப்பதற்கு தேசிய கல்விக் கொள்கையைப் புதிதாக அறிவித்து இருக்கின்றது. பாஜ அரசு இந்தி ஏகாதிபத்தியத்தை நிலைநிறுத்த முயன்றால், அடி முதல் நுனி வரை வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்ப்பதற்கு தமிழகம் சர்வபரி தியாகத்திற்கும் தயாராக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Tamil Nadu ,Vaiko ,sacrifice , Hindi imperialism, to uproot, Tamil Nadu, ready for any sacrifice, Vaiko report
× RELATED மக்களின் தாகம் தீர்க்கும் நீர், மோர்...