சீன அரசு குறித்து விமர்சனம் ஹாங்காங் பத்திரிகை அதிபர் கைது: தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முதல் நடவடிக்கை

ஹாங்காங்: சீன அரசு குறித்து விமர்சனம் செய்ததற்காகவும், சதித்திட்டங்கள் தீட்டியதாகவும் ஹாங்காங் பத்திரிகை அதிபர் ஜிம்மி லாய் கைது செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் இயற்றப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ள முதல் நடவடிக்கை இது என்பதால் சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுள்ளது. ஹாங்காங் நாட்டின் தன்னாட்சி அதிகாரத்தை பறிக்கும் வகையில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை கடந்த ஜூன் மாதம் சீனா நிறைவேற்றியது. இந்த சட்டத்தின் கீழ் ஒருவரைக் கைது செய்ய வாரண்ட் தேவையில்லை. வாரண்ட் இல்லாமல் ஒருவரின் வீட்டில் ஆதாரங்களை சேகரிப்பதற்காக போலீசார் சோதனையிட முடியும். இந்த சட்டத்தில் ஒருவர் கைதானால் அவர் தன் பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை ஒப்படைக்க வேண்டும். நாட்டை விட்டு வெளியேற முடியாது.

சீனாவின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் சீன அரசுக்கு எதிரானவர்களை ஒடுக்கவே இச்சட்டம் கொண்டு வரப்பட்டிருப்பதாக அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த சட்டத்தால் ஹாங்காங்கின் தன்னாட்சி அதிகார சுதந்திரம் முற்றிலும் பறிக்கப்பட்டு, சீனாவைப் போன்றே அடக்கு முறை நாடாக மாறும் என அந்நாட்டு மக்களும் பல போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில், இந்த கொடூர சட்டத்தின் கீழ்தான் தற்போது ஆப்பிள் டெய்லி பத்திரிகையின் தலைவர் ஜிம்மி லாய் (72) கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹாங்காங்கைச் சேர்ந்த ஜிம்மி லாய் நடத்திவரும் நெக்ஸ்ட் டிஜிட்டல் நிறுவனம் சார்பில் ஆப்பிள் டெய்லி தினசரி பத்திரிகை பிரசுரமாகி வருகிறது. இந்த பத்திரிகை, சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகவும், அதன் சர்வாதிகாரப் போக்கை விமர்சித்தும், ஹாங்காங்கில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் செய்திகளை வெளியிட்டு வருகிறது. ஹாங்காங் அரசு நிர்வாகத்தில் சீன அரசு தொடர்ந்து அத்துமீறுவது குறித்தும் தொடர்ந்து செய்திகள் எழுதப்பட்டது.

இந்நிலையில் நேற்று எந்த முன்னறிவிப்பும் இன்றி ஜிம்மி லாய் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் நுழைந்து அதிரடி சோதனையிட்டனர். அலுவலக கட்டடம் முடக்கப்பட்டது.

பின்னர் சிறிது நேரத்தில் ஜிம்மி லாயை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். அவருடன் சேர்த்து அவரது மகன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர்களை ஹாங்காங் போலீசார் வெளியிடவில்லை. இதுபற்றி தெரிவித்துள்ள ஹாங்காங் அரசு, 39 வயது முதல் 72 வயது வரையிலான 7 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. ஜிம்மி லாய் உள்ளிட்டோர் தேசிய பாதுகாப்பு சட்ட விதிமுறைகளை மீறியதாகவும், வெளிநாட்டினருடன் இணைந்து சதித்திட்டத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பாம்பியோவை வெள்ளை மாளிகையில் சந்தித்து ஜிம்மி லாய் பேசியதாகவும், ஹாங்காங் நிர்வாகத்தில் சீனா தலையிடுவது குறித்து விவாதித்திருந்தார் என்றும் தகவல்கள் வெளியாகின. இதனை அடுத்து சீனாவுக்கு வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாகவே தற்போது ஜிம்மி லாயை கைது செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. லாயின் கைது நடவடிக்கைக்கு ஹாங்காங் பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. கைதுகளும், அலுவலக சோதனைகளும் ஹாங்காங்கில் என்ன நடக்கிறது என்று புரியாத அதிர்ச்சியாக இருக்கிறது. சீனாவின் இந்த புதிய சட்டம் ஊடகத்துறைக்கும், பத்திரிகையாளர்களுக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலாகவும் அமைந்திருக்கிறது என்று ஹாங்காங் பத்திரிகையாளர்கள் சங்கத் தலைவர் க்ரிஸ் யேங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>