×

தங்கம் கடத்தல் வழக்கு சொப்னா ஜாமீன் மனு தள்ளுபடி: என்ஐஏ நீதிமன்றம் அதிரடி

திருவனந்தபுரம்: தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சொப்னாவின் ஜாமீன் மனுவை கொச்சி என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சல் வழியாக தங்கம் கடத்திய வழக்கில் சொப்னா, சரித்குமார், சந்தீப் நாயர், ரமீஸ் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டனர். இந்த நிலையில் ஜாமீன் மனு கோரி சொப்னா மற்றும் சந்தீப் நாயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதில் சொப்னாவின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது சொப்னா தரப்பில் ஆஜரான வக்கீல் கூறுகையில், ‘‘இந்த வழக்கில் தீவிரவாத இயக்கங்களுக்கு தொடர்பில்லை. எனவே ‘உபா’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அரசியல் காரணங்களுக்காகவே ‘உபா’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

இதையடுத்து ‘உபா’  சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கான காரணங்கள் மற்றும் கேஸ் டயரியை தாக்கல் செய்ய என்ஐஏவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த வாரம் என்ஐஏ கேஸ் டயரியை தாக்கல் செய்தது. பின்னர்  சொப்னாவின் ஜாமீன் மனு மீது மீண்டும் விசாரணை நடந்தது. அப்போது என்ஐஏ தரப்பில் ஆஜரான உதவி சொலீசிட்டர் ஜெனரல் விஜயகுமார் வாதிடுகையில், ‘‘சொப்னாவுக்கு தூதரகத்தில் மட்டுமல்லாமல், கேரள முதல்வர் அலுவலகம் மற்றும்  காவல்துறையில் பெரும் செல்வாக்கு இருந்தது. முதல்வர் பினராயி விஜயனிடமும் அவருக்கு நெருங்கிய பழக்கம் இருந்து வந்துள்ளது.

மேலும் தங்க கடத்தல் மூலம் கிடைக்கும் பணம் தீவிரவாத செயல்களுக்கும் சென்றுள்ளது. கேஸ் டயரியை படித்து பார்த்தால் இது தொடர்பான விபரங்கள் தெரியவரும்’’ என வாதிட்டார். இதையடுத்து தீர்ப்பை நீதிபதி 10ம் தேதிக்கு(நேற்று) தள்ளி வைத்தார். இந்த நிலையில் நேற்று ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வெளியானது. கொச்சி என்ஐஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமார் தீர்ப்பில் கூறுகையில், ‘‘தங்கம் கடத்தல் வழக்கில் சொப்னாவுக்கு தொடர்பு இருப்பது முதல்கட்ட விசாரணையிலேயே தெரியவந்துள்ளது. மேலும் ‘உபா’ பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யவும் தகுந்த முகாந்திரம் உள்ளது. தங்கம் வந்த பார்சலை விடுவிக்க சுங்க இலாகாவை சொப்னா தொடர்பு கொண்டதுக்கான தகுந்த ஆதாரங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எனவே சொப்னாவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என்றார்.

* துபாய் புறப்பட்டனர்
தங்கம் கடத்தல் வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள பைசல் பரீதை கைது செய்ய துபாய் செல்ல என்ஐஏ அதிகாரிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. என்ஐஏ எஸ்பி தலைமையில் இரண்டு அதிகாரிகள் நேற்று துபாய் புறப்பட்டனர். இதற்கிடையே கைதாவதில் இருந்து தப்பிக்க பைசல் பரீத் சில தந்திர வேலைகளில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது, துபாயில் ஏதாவது குற்ற வழக்குகளில் ஈடுபட்டால் அவர்கள் அங்கிருந்து வெளியே செல்ல முடியாது. எனவே ஏதாவது குற்றவழக்கில் ஈடுபட்டு சிறை செல்வதன்மூலம் என்ஐஏவிடம் இருந்து தப்பிக்கலாம் என்று திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Sopna , Gold smuggling case, Sopna, bail petition, dismissal, NIA court
× RELATED கடந்த ஆண்டு தங்க கடத்தலில் ஈடுபட்டதாக...