×

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 2 மாணவிகள் முழு மதிப்பெண்

காஞ்சிபுரம்: கொரோனா ஊரடங்கு காரணத்தால், தமிழகத்தில் 10ம் வகுப்பு அரசு பொத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு மற்றும் வருகை பதிவு அடிப்படையில் தேர்ச்சி அளிக்க தமிழக அரசு அறிவித்தது. அதன்படி 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியிடப்பட்டன. இந்த அரசு பொதுத்தேர்வில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 26,701 மாணவர்கள், 26,040 மாணவிகள் என மொத்தம் 52,741 பேர் இறுதித் தேர்வு எழுத தயாராக இருந்தனர். கொரோனா ஊரடங்கால் அனைவரும் காலாண்டு, அரையாண்டு, வருகைப் பதிவின் அடிப்படையில் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் காஞ்சிபுரத்தில் 2 மாணவிகள் 500க்கு 500 பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர். செய்யூர் கிரசண்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம் விக்டோரியா பள்ளியில் தலா ஒரு மாணவி 500க்கு 500 மதிப்பெண்கள் பெற்றி தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் 4 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள்  500க்கு 499 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளை பொறுத்த வரையில் காஞ்சிபுரத்தை அடுத்த ஏகனாபுரம் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒரு மாணவி 500க்கு 494, கிழக்கு தாம்பரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒரு மாணவி 500க்கு 490 மதிப்பெண்கள் பெற்றனர். மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய குழந்தை தொழிலாளா் திட்டத்தின் கீழ் குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். அதில், 29 பேர் 10ம் வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். நாயக்கன்பேட்டை சிறப்பு பயிற்சி மையத்தில் படித்த நவீன் என்ற மாணவன் 500க்கு 368, கண்ணகி நகரை சோ்ந்த முத்துபாரதி 347, பிள்ளையார் பாளையத்தை சேர்ந்த நாகராஜ் 345 மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர்.

* 20 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி என்ற அடிப்படையில் முடிவுகளை தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இந்ததேர்வு எழுத மாணவர்களை விட, மாணவிகளே அதிகளவில் விண்ணப்பித்தனர். அந்த அடிப்படையில் தேர்ச்சியில் மாணவிகள் முதலிடத்தை பிடித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம்  52,741 பேர் விண்ணப்பித்தனர். அதில் 26,701 மாணவர்கள், 26,040 பேர் மாணவிகள். அவர்களில் பருவத் தேர்வு, வருகை பதிவேடு அடிப்படையில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில் தேர்ச்சி விகிதத்தில் தமிழகத்தில் காஞ்சிபுரம் முதலிடத்தை பிடித்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் 50,916 பேர் விண்ணப்பித்தனர். அதில், மாணவர்கள் 25,691, மாணவிகள் 25,225 பேர் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 2ம் இடம் பிடித்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் 49,235 பேர் விண்ணப்பித்து, மாணவர்கள் 23,938, மாணவிகள் 25,297 பேர் தேர்ச்சி பெற்று, மாநிலத்தில் 3ம் இடத்தை பிடித்துள்ளனர். காஞ்சிபுரம், ேவலூர் ஆகிய மாவட்டங்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு பிறகு, 10ம் வகுப்பு தேர்வில் முதல் இரண்டு இடத்தை தற்போது பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : examination ,Kanchipuram district , Okanchipuram district, 10th class, 2 students in general examination, full marks
× RELATED நீட் அடிப்படை பயிற்சி தேர்வு...