×

உயிரிழந்தவருக்கு கொரோனா நிவாரணம் வழங்காததை கண்டித்து தனியார் தொழிற்சாலையை ஊழியர்கள் முற்றுகை

செய்யூர்: செய்யூர் அடுத்த சித்தாமூர் அருகே தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்காததை கண்டித்து, அவர்களது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் தொழிற்சாலையை முற்றுகையிட்டு, திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அருகே சித்தாமூர் அடுத்த பொலம்பாக்கம் கிராமத்தில் தனியார் பைக் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு, 600க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். அதில், 50க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதில், சோத்துப்பாக்கத்தை சேர்ந்த ஒரு தொழிலாளி, சிகிச்சை பலனின்றி இறந்தார். கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதாலும், இறப்புகள் ஏற்படுவதாலும் தொழிற்சாலையை தற்காலிகமாக மூடக்கோரி ஆலை நிர்வாகத்திடம் ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், கொரோனா சிகிச்சை பெறும் ஊழியர்களுக்கு, உரிய சிகிச்சை, நிவாரணம் வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், தொழிற்சாலை நிர்வாகம், ஊழியர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து, தொழிற்சாலையை வழக்கம்போல் இயக்குவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இறந்த ஊழியரின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, சக ஊழியர்கள்கள் குடும்பத்தினர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 50க்கும் மேற்பட்டோர் நேற்று காலை தொழிற்சாலை நுழைவாயில் முன்பு திரண்டனர். அங்கு, தொழிற்சாலையை முற்றுகையிட்டு ஆர்பாட்டம் நடத்தினர். தகவலறிந்து சித்தாமூர் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினர். அப்போது, அவர்களது கோரிக்கைகளுக்கு, தொழிற்சாலை நிர்வாகத்திடம் பேசி, உரிய தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : factory ,victims , Casualty, corona relief, condemnation, siege of private factory, employees
× RELATED தெலங்கானாவில் வேதித் தொழிற்சாலையில்...