கல்வராயன்மலையில் மரவள்ளி அறுவடை தீவிரம்: போதிய விலையில்லாததால் விவசாயிகள் கவலை

சின்னசேலம்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை 1095 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் சின்ன கல்வராயன்மலை, பெரிய கல்வராயன்மலை என்ற இரு பிரிவுகளாக உள்ளது. அதாவது, மலையின் வடக்கு பகுதியில் உள்ள சின்ன கல்வராயன்மலை கடல் மட்டத்தில் இருந்து 2700 அடி உயரத்திலும், தெற்குப் பகுதியில் உள்ள பெரிய கல்வராயன்மலை கடல் மட்டத்தில் இருந்து 4000 அடி உயரத்திலும் உள்ளது. இது தமிழக சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாக விளங்குகிறது. கல்வராயன்மலை ஒன்றியத்தில் ஆரம்பூண்டி, இந்நாடு, கரியாலூர், வெள்ளிமலை, பொட்டியம், சேராப்பட்டு, மணியார்பாளையம் என 15 ஊராட்சிகளை சேர்ந்த 172 கிராமங்களில் சுமார் ஒரு லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.

கல்வராயன்மலையில் மா, பலா, கடுக்காய், வரகு, சாமை, திணை வகைகள், தோட்டப்பயிர்கள் பயிர் செய்த போதிலும்,  மரவள்ளி பயிர் செய்வதே பிரதான தொழிலாக விளங்குகிறது. இங்கு மரவள்ளி சாகுபடிக்கு ஏற்ற மண் வளம் உள்ளதால் மானாவாரி பயிராக விளைகிறது. இதனால் மலையில் விளையும் மரவள்ளியின் மாவுப்பொருள் கெட்டியாக உள்ளது. நிலப்பகுதியில் விளையும் மரவள்ளி கிழங்கைவிட மலையில் விளையும் மரவள்ளி கிழங்கில் நல்ல திடமான ஜவ்வரிசி உற்பத்தி செய்யலாம். இதை உணர்ந்த சேலம் மாவட்ட வியாபாரிகளும், புரோக்கர்களும் கல்வராயன்மலைக்கு வந்து இங்குள்ள விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு மரவள்ளியை வாங்கிச் செல்கின்றனர்.

இதனால் மரவள்ளி பயிரிட்டு, களைவெட்டி, உரம் வைத்து காப்பாற்றி ஆறு மாதம் கழித்து அறுவடை செய்யும்போது விவசாயிகளுக்கு கிடைக்கும் லாபம் என்னவோ மிகக்குறைந்த அளவில்தான் உள்ளது. சில நேரங்களில் நஷ்டமும் ஏற்படுகிறது. எனவே, விவசாயிகளின் நலன்கருதி வெள்ளிமலையில் மரவள்ளி கொள்முதல் நிலையம்,  மரவள்ளி தொழிற்சாலை அமைக்க அரசு முன்வர வேண்டும். கொள்முதல் நிலையம்  அமைத்தால் மலை விவசாயிகளுக்கு கொள்முதல் செய்தவுடன் பணம்  கிடைக்கும். தொழிற்சாலை அமைத்தால் படித்த, படிக்காத இளைஞர்களுக்கு  வேலைவாய்ப்பு கிடைக்கும். கல்வராயன்மலையைப்பற்றி நன்கு தெரிந்த தமிழக முதல்வர்  வெள்ளிமலையில் சேகோ பேக்டரி, மரவள்ளி கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும் என மலைமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories:

More
>