×

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை மட்டுமே வெளியிடப்பட்டது..இறுதி அறிக்கை அல்ல! மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

புதுடெல்லி: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை மட்டுமே வெளியிடப்பட்டது, இறுதி அறிக்கை அல்ல என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை-2020 பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் இந்த வரைவு அறிவிக்கையைக் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். மார்ச் மாதம் வெளியிடப்பட்ட இந்த வரைவு அறிவிக்கை பல்வேறு திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் முறைகளைக் கொண்டுள்ளது. இந்த அறிவிக்கை மீது தங்கள் கருத்துகளை ஆகஸ்ட் 11 வரை மக்கள் தெரிவிக்கலாம் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஆனால், கால அவகாசத்தை நீட்டிக்கவும்,வரைவைத் தடை செய்யவும் கோரி வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்,  இது வெறும் வரைவுதான். இறுதி அறிக்கை அல்ல. வெறும் வரைவை எதிர்த்து எப்படிப் போராட்டம் நடத்துகிறார்கள். மக்கள் கருத்துக்காக இந்த வரைவு வைக்கப்பட்டிருக்கிறது. அனைவரது கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. கருத்துகள் கவனத்தில் கொள்ளப்பட்டு மாற்றங்கள் இடம்பெறும். விதிமுறைகளின்படி, பொதுமக்கள் கருத்துக்காக 60 நாட்கள் கால அவகாசம் கொடுத்தால் போதுமானது. ஆனால், இதற்கு கூடுதலாகவே கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் வெறும் வரைவைக் காரணம் காட்டி குதிக்கிறார்கள், என கூறியுள்ளார்.


Tags : Prakash Javdekar , Environmental Impact Assessment, Draft Report,, Union Minister Prakash Javdekar
× RELATED உலகின் புலிகள் எண்ணிக்கையில் 70...