×

பருவ மழை பொழிந்தும் நீர்வரத்தின்றி வறண்டு கிடக்கும் அணைகள், ஏரிகள்: ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்

சேலம்:சேலத்தில் குமரகிரி ஏரி, மூக்கனேரி, புதுஏரி, போடிநாயக்கன்பட்டி ஏரி, குருவிபனை ஏரி, எருமாபாளையம் ஏரி, சீலாவரி ஏரி, அம்பாள் ஏரி என பல ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளுக்கு  அந்த பகுதிகளில் உள்ள மலைகளில்  இருந்து, மழைக்காலத்தில் நீர்வருகிறது. கடந்தாண்டு ஓரளவுக்கு மழை கை கொடுத்தால் சேலம் மாவட்டத்திலுள்ள ஏரிகள் நிரம்பியது. அதில் புதுஏரி, மூக்கனேரி, குமரகிரி உள்பட ஒரு சில ஏரிகள் முழு கொள்ளவை எட்டியது. மீதமுள்ள ஏரிகளில் 50 சதவீதம் தான் தண்ணீர் நிரம்பியது.  இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் சேலத்தில் அக்னி நட்சத்திரத்தின் போது  கோடை மழையும்,  கை கொடுக்கும்.

ஆனால் நடப்பாண்டு  அக்னி நட்சத்திரத்திலும் போதிய மழை இல்லை. ஓரிரு நாட்கள் மட்டுமே மழை பெய்தது.  இதுவும் பெரிய அளவில் இல்லை. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அங்கு தென்மேற்கு பருவமழை கை கொடுத்தது. இம்மழை தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்கள் பயன்பெறவில்லை. கடந்த ஜூனில் மழை இல்லாமல் வறண்ட வானிலையே காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஜூலையில் தென்மேற்கு பருவமழை கை கொடுத்துள்ளதால்,  தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான இடங்களில் நீர்நிலைகள், கால்வாய், மலைப்பாதைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்த வகையில், சேலம் மாவட்டத்தில் மற்ற இடங்களை காட்டிலும் ஏற்காட்டில் நல்ல மழை பொழிந்து வருகிறது. இதன் காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் திடீர் நீர்வீழ்ச்சிகள் தோன்றியுள்ளது. இவ்வாறு ஓடும் மழைநீரானது அடிவாரத்தில் உள்ள கருங்காலி கிராமத்தில் உள்ள தடுப்பணையில் கரைபுரண்டு ஓடுகிறது. தடுப்பணையில் ஓடும் மழைநீரில் இளைஞர்கள் உற்சாக குளியல் போட்டு வருகின்றனர். அதேபோல் ஏற்காடு மலைப்பாதையில் இருந்து வரும் மழைநீரானது அடிவாரத்தில் உள்ள கன்னங்குறிச்சி லட்சுமி நகருக்கு வரும். அங்கிருந்து பாய்ந்து ஓடும் மழைநீரானது கால்வாய் மூலம் கன்னங்குறிச்சியில் உள்ள புது ஏரிக்கும், அதிலிருந்து வெளியேறும் மழைநீர் மூக்கனேரிக்கும்  வருகிறது.

சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தும், இன்னும் எந்த நீர்நிலைகளுக்கும் தண்ணீர் முறையாக வந்து சேரவில்லை. இவ்வாறு நீர்நிலைகளுக்கு வரும் கால்வாயில் ஏராளமான ஆக்ரமிப்புகள் இருப்பதால் நீர் வரவில்லை என்று விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், புதுஏரி, வாழப்பாடியை அடுத்த பேளூர்  ஆணைமடுவு அணை, கரியகோயில் அணை, அயோத்தியாப்பட்டணம் அக்ரஹாரம் ஏரி போன்றவை தண்ணீர் இல்லாததால் முள்செடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. அதேபோல் பனமரத்துப்பட்டி ஏரி முழுக்க முள்செடிகள் வளர்ந்துள்ளது. போடிநாயக்கன்பட்டி ஏரி, குமரகிரி ஏரி முழுக்க ஆகாய தாமரை அதிகளவில் சூழ்ந்துள்ளது. எதிர்வரும் காலத்தில் தென்மேற்கு மற்றும் வட கிழக்கு பருவமழை அதிகளவில் பெய்ய வாய்ப்புள்ளது. அதனால் ஏரிக்கு நீர் வழிப்பாதையில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும்.

அதே வேளையில் ஏரியில் ஆகாய தாமரையை அகற்ற அதிகாரிகள் முன்வரவேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து சேலத்தை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது: ஏற்காடு மலைப்பகுதியில் வழிந்தோடும் மழைநீரானது அடிவாரத்தில் உள்ள புதுஏரிக்கு வருகிறது. ஜருகுமலையில் பெய்யும் மழைநீரானது கந்தாஸ்ரமம் வழியாக அம்மாப்பேட்டை காமராஜர் நகர் காலனி, ராமநாபுரம் வழியாக குமரகிரி ஏரியில் கலக்கிறது. நாமமலையில் பெய்யும் மழைநீரானது நாமமலை அடிவாரத்தில் இருந்து ராமநாதபுரம் வழியாக குமரகிரி ஏரியில் கலக்கிறது. இதுபோன்று பல ஏரிகளுக்கு மழைகளில் நீர் வந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு ஏரி, குளம், குட்டைகளுக்கு வரும் நீர்வழிப்பாதையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் உள்ளிட்ட மாதங்களில் தென்மேற்கு பருவமழையும், செப்டம்பர், அக்டோபர், நவம்பரில் வடகிழக்கு பருவமழை  கைக்கொடுக்கும். இதில் தென்மேற்கு பருவமழை  உள் மாவட்டங்களும், வடகிழக்கு பருவமழை கடலோர மாவட்டங்களும் பயன்தரும். இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கி, அவ்வப்போது மழை பெய்து வருகிறது. ஆனால் ஏரி, குளம், குட்டைகளுக்கு வரும் நீர்வழித்தடங்களில்  ஆக்கிரமிப்புகள் உள்ளதால் முறையாக தண்ணீர் வந்து சேரவில்லை.  பொதுமக்கள், விவசாயிகளின் நலன் கருதி பாரபட்சமின்றி நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு விவசாயிகள் கூறினர்.


Tags : removal ,lakes , Monsoon, dams, lakes, farmers
× RELATED சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!