×

மருந்துகளுக்காக ஏற்றுமதி செய்வதால் மஞ்சள் சாகுபடி பரப்பு அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

சேலம்:  மாத்திரை,மருந்துக்காக வெளிநாடுகளுக்கு மஞ்சள் ஏற்றுமதி செய்யப்படுவதால், தமிழகத்தில்  மஞ்சள் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. இது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் ஈரோட்டுக்கு அடுத்தபடியாக சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பூர், கோவை பகுதிகளில் மஞ்சள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் மஞ்சளை விவசாயிகள் விற்பனைக்காக மஞ்சள் மண்டிக்கு ஏலத்திற்கு கொண்டு வருகின்றனர். இவ்வாறு விற்பனைக்கு வரும் மஞ்சளை ஏலம் எடுக்க சென்னை, கோவை, மதுரை, பெங்களூர், ஆந்திரா, மகாராஷ்டிரா உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வருகை தருகின்றனர்.

மஞ்சளை பொறுத்தமட்டில் கடந்த ஒரு நூற்றாண்டாக தமிழகத்தில்தான் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டது.ஆனால் வட மாநிலத்தை சேர்ந்த சில விவசாயிகள், தமிழகத்தில் இருந்து விதை மஞ்சளை எடுத்துச்சென்று,அங்கும் சாகுபடி செய்தனர். இதில் அவர்கள், பெரிய அளவில் லாபம் பார்க்கத் தொடங்கினர். இதனால் கடந்த சில ஆண்டுகளாக வட மாநிலங்களில் மஞ்சள் சாகுபடி அதிகரித்துள்ளது. இதனால் வட மாநில வியாபாரிகள் தமிழகத்திற்கு வராமல்,அந்தந்த மாநிலத்திலேயே மஞ்சளை ஏலம் எடுத்துக்கொள்கின்றனர்.இதன் காரணமாக இரண்டு ஆண்டாக தமிழக மஞ்சள் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காமல் உள்ளது.

கடந்த மூன்று ஆண்டுக்கு முன்பு ஒரு குவிண்டால் மஞ்சள் 9000 முதல் 12 ஆயிரம் வரை விற்பனையானது. வட மாநில வியாபாரிகள் வருகை சரிவால் தற்போது குவிண்டால் 6500 முதல் 7500 வரை போகிறது.  உரிய விலை கிடைக்காததால் மஞ்சள் விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.  உரிய விலை கிடைக்கவில்லை என்றாலும், தற்போது கொரோனா நோய் எதிர்ப்பு சக்திக்காக மஞ்சளின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் வெளிநாடுகளுக்கு தமிழக மஞ்சள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் தமிழக மஞ்சளுக்கு வெளிநாடுகளில் மவுசு கூடியுள்ளது.வெளிநாடுகளில் மஞ்சளின் தேவை அதிகரித்துள்ளதால், தமிழக விவசாயிகள் மஞ்சள் சாகுபடி பரப்பையும் அதிகரித்துள்ளனர்.

இது குறித்து சேலத்தை சேர்ந்த மஞ்சள் விவசாயிகள் கூறியதாவது: உணவுக்காக பயன்படும் மஞ்சளில் இருந்து மாத்திரை,மருந்து,சித்தா,வாசனைப்பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் ஆண்டு முழுக்க மஞ்சளின் தேவை இருந்து கொண்டே இருக்கும். இத்தனை ஆண்டு காலம் மஞ்சள் என்றால், அது தமிழகத்தின் பயிர் என்ற பெயரை தக்க வைத்துகொண்டு இருந்தோம். அதையும் வட மாநில விவசாயிகள் விட்டுவிட்டு வைக்க வில்லை.  இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவிய பின்பு உலகளவில் மஞ்சளின் தேவை அதிகரித்துள்ளது. மஞ்சளை கிருமிநாசினியாக பயன்படுத்த தொடங்கவிட்டனர்.

கொரோனாவுக்கு முன்பு 20 சதவீதம் மஞ்சள் தான் அமெரிக்கா,ஜப்பான்,சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.தற்போது அது 25 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மஞ்சள் சாகுபடி பரப்பை விவசாயிகள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டனர். மேலும் தற்போது பெய்து வரும் மழை மஞ்சள் சாகுபடிக்கு கை கொடுத்து வருகிறது. எதிர்காலத்தில் வெளிநாடுகளில் மஞ்சள் தேவை மேலும் அதிகரிக்கும்போது,சாகுபடி பரப்பு மேலும் அதிகரிக்கப்படும். இவ்வாறு கூறினர்.

Tags : turmeric cultivation area , Drugs, turmeric cultivation, farmers
× RELATED தூத்துக்குடியில் தொழில் ஏற்றுமதி...