×

நீலகிரியில் 7 நாட்களில் 14 ஆயிரம் மி.மீ., மழைப்பதிவு

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3ம் தேதியில் இருந்து 9ம் தேதி வரை 14 ஆயிரத்து 142 மி.மீ., மழை பெய்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு கடந்த 3ம் தேதி மழை துவங்கியது. பலத்த சூறாவளி காற்றுடன் மிக அதிக கனமழை கொட்டியது. குறிப்பாக ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுகாகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மழையின் தாக்கம் தீவிரமாக இருந்தது. பலத்த காற்றுடன் பெய்த மழையால் மாவட்டத்தில் பல இடங்களில் மரங்கள் விழுந்து சாலைகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் முழுவதும் 3ம் தேதியில் இருந்து நேற்று 9ம் தேதி வரையிலான 7 நாட்களில் 14 ஆயிரத்து 142 மி.மீ., (1414.2 செ.மீ.,) மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக 6ம் தேதி 3,223 மி.மீ., மழையும், 7ம் தேதி 3,820 மி.மீ., மழையும் பெய்தது குறிப்பிடத்தக்கது. குந்தா தாலுகாவிற்குட்பட்ட இயற்கை எழில் கொஞ்சும் ேசாலை மரக்காடுகள் நிறைந்த அவலாஞ்சி பகுதியில் 7 நாட்களில் 1,782 மி.மீ., மழையும், தென்னிந்தியாவின் சிரபுஞ்சி என்று அழைக்கப்படும் கூடலூர் அருகேயுள்ள தேவாலாவில் 1,397 மி.மீ., மழை கொட்டியது.

இதனால் அவலாஞ்சி அருகேயுள்ள எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் மண் சரிவு, ராட்சத மரங்கள் சரிந்து விழுந்து பல இடர்பாடுகள் ஏற்பட்டன. இதேபோல் கூடலூர், பந்தலூர் தாலுகாகளிலும் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மாவட்ட நிர்வாகத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன. இதனிடையே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலும் இதேபோல் 10 ஆயிரம் மி.மீ., மழை பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சூழலியல் ஆர்வலர்கள் கூறியதாவது: நீலகிரியில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை பெய்யும் தென்மேற்கு பருவமழையின் போது சராசரியாக 800 மி.மீ., அளவிற்கு தான் மழை பெய்யும்.

கடந்த 2 ஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்தில் வரலாறு காணாத அளவில் மழை பெய்து வருகிறது. கடந்த 100 ஆண்டுகளில் நீலகிரி மாவட்டத்தில் இப்படி ஒரு பெருமழை பெய்தது இல்லை. இந்த பெருமழையால் பெரிய அளவிலான நன்மைகள் இல்லை. நிலச்சரிவு, மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு, பயிர்கள் சேதம் என பாதிப்புகள் தான் அதிகம் உள்ளன. குறைந்த நாட்களில் அதிக மழை பொழிவு ஏற்படுவதற்கு காரணம் பருவ நிலை மாற்றமே காரணம். எனவே சுற்றுசூழல் பாதுகாப்பிற்கு மக்கள் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும், என்றனர்.

மீட்பு பணிக்காக ஈரோடு போலீசார் 50 பேர் ஊட்டி பயணம்
ஈரோடு: நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, மீட்பு  பணிகளுக்கு ஈரோடு போலீசார் 50 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
நீலகிரி  மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால், மலைக்கிராமங்கள், குடியிருப்புகளில் மழை வெள்ளம்  சூழ்ந்துள்ளது. மேலும், மண் சரிவு ஏற்பட்டு மரங்கள் சாலைகளின் நடுவே  விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட போலீசார்,  தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்,  நீலகிரி மாவட்ட போலீசாருக்கு உதவியாக, ஈரோடு மாவட்டத்தில் இருந்து பேரிடர்  மேலாண்மை பயிற்சி முடித்த 50 போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள்  நீலகிரி மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பும் வரை மீட்பு பணியில்  ஈடுபடுவார்கள் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : rainfall ,Nilgiris , Nilgiris, 14 thousand mm, rainfall recorded
× RELATED வார விடுமுறை நாளில் களைகட்டிய சுற்றுலா தலங்கள்