×

குந்தா அணையில் நீர் திறப்பு நிறுத்தம்: மின்நிலையங்களில் உற்பத்தி அதிகரிப்பு

மஞ்சூர்: நீர்பிடிப்பு பகுதிகளில் மழையின் தாக்கம் குறைந்ததால் 4 நாட்களுக்கு பின் குந்தா அணையில் இருந்து நீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டது. பல்வேறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்ததால் மின் நிலையங்களில் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் குந்தா மற்றும் பைக்காரா நீர் மின் திட்டத்தின் கீழ் 13 நீர் மின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, கிளன்மார்கன், பைக்காரா உள்ளிட்ட பல்வேறு அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீரின் மூலம் மின் நிலையங்களில் 833.65 மெகாவாட் மின்சாரம்  உற்பத்தி செய்யப்படுகிறது.

மேலும் மின்நிலையங்களில் மின்சார உற்பத்திக்கு பின் ெவளியேற்றபடும் தண்ணீரானது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுடன் கோவை, ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய பவானி பாசனப் படுகை விவசாயிகளின் முக்கிய நீராதாரமாகவும் உள்ளது.
இந்நிலையில் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்தது. குறிப்பாக அணைக்கட்டுகள் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் ஆறுகள், சிற்றோடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளின் நீர் மட்டமும் மள,மளவென உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் அவலாஞ்சி, எமரால்டு பகுதிகளில் பெய்த பலத்த மழையால் மஞ்சூர் அருகே உள்ள குந்தா அணை நிரம்பியது.  இதை தொடர்ந்து 4 நாட்களுக்கு முன் குந்தா அணை திறக்கப்பட்டு வினாடிக்கு 1,500 கன அடி வீதம் அணையில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் நீர்பிடிப்பு பகுதிகளில் மழையின் தாக்கம் பெருமளவு குறைந்தது. இதையடுத்து குந்தா அணையில் இருந்து நீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டது. தொடர்ந்து பெய்த பலத்த மழையால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் நீர் இருப்பு பெருமளவு உயர்ந்துள்ளது. இதனால் பெரும்பாலான மின் நிலையங்களில் வழக்கத்தை விட கூடுதலாக மின்சார உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : Water shutdown ,Kunda Dam ,power plants , Kunda Dam, Water Stop, Power Stations
× RELATED அரசு, தனியார் பங்களிப்புடன் 12 நீரேற்று...