×

ஒடுகத்தூரில் இருந்து தினமும் 1000 டன் வரை அறுவடையானது கொய்யா விற்பனையை முடக்கிய கொரோனா: வாழ்வாதாரமின்றி தவிக்கும் விவசாயிகள்

மாதனூர்:  வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் பகுதியில் ‘கொரோனாவால் ஏழைகளின் ஆப்பிள் கொய்யா’ விற்பனையாகாமல் முடங்கியுள்ளது. இதனால் வாழ்வாதாரமின்றி தவித்து, பல லட்சம் நஷ்டமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். கொய்யாப் பழத்தில் மிக அதிகமான மருத்துவப் பயன்கள் உள்ளன. விலை மலிவாகவும், மிக எளிதாகவும் கிடைப்பதால் கொய்யா பழத்தைப் பற்றிய நன்மைகளை வெகுசிலர் அறியாமலே விட்டுவிட்டனர். அதில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதிலிருந்து உடல் எடையைச் சீராக மேம்படுத்தவும் கொய்யா பழம் மிகவும் உதவியாக உள்ளது.

கொய்யாப் பழம் கருவுறுதலை மேம்படுத்த கனிமச்சத்தினையும் கொண்டுள்ளது. கொய்யாப் பழத்தில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்த அளவினை சீராக வைக்க உதவுகின்றது. கொய்யாப் பழமும், வாழைப்பழமும் ஏறத்தாழ ஒரே அளவு பொட்டாசியத்தை பெற்றுள்ளன. மேலும் அவற்றில் உள்ள 80 சதவீதம் தண்ணீர், தோலில் உள்ள நீர் ஆவியாகி வெளியேறுவதைத் தடுக்கிறது. 4 ஆரஞ்சு பழத்தினுள் உள்ள சத்து ஒரு கொய்யாவில் கிடைக்கிறது என்று கூறுகின்றனர். இப்படிப்பட்ட மருத்துவ குணம் நிறைந்த கொய்யா பழத்தினை சாப்பிட்டால் கொரோனா பாதிப்பும் பறந்தோடும் என்று கூறுகின்றனர்.

ஆனால் தமிழ்நாட்டில் கொய்யாவுக்கு பெயர் போன வேலூர் அடுத்த ஒடுகத்தூர் பகுதியில், 1000 ஏக்கருக்கு மேல் கொய்யா செடிகள் வைத்து விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் இருந்துதான் நாள் ஒன்றுக்கு 1000 டன் கொய்யா பழங்கள், காய்கள் விற்பனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், தற்போது கொரோனா பாதிப்பினால் பொதுபோக்குவரத்து வசதி இல்லாத காரணத்தினாலும் கொரோனா அச்சத்தில் இருப்பதாலும் ஒடுகத்தூர் பகுதியில் விளையும் கொய்யாவை வாங்குவதற்கு ஆட்களே இல்லை என்று விவசாயிகள் குமுறுகின்றனர். இதற்கு முன்பாக ஒரு கிலோ கொய்யா 50 முதல் 150 வரையில் தரத்திற்கு ஏற்ப விற்பனையானது.

இப்போது கிலோ 10 முதல் 15 வரையில் மட்டுமே வாங்கி செல்கின்றனர். 5 மாதங்களாக ‘ஏழைகளின் ஆப்பிளான கொய்யா’ விற்பனை முடங்கியுள்ளது. இதனால் பல லட்சம் நஷ்டமடைந்து, வாழ்வாதாரம் இழந்து தவித்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கொரோனா பாதிப்பு உள்ள இந்த நேரத்தில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொய்யா பழத்தினை உற்பத்தி செய்து நஷ்டத்தில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

கொய்யா பழச்சாறு தொழிற்சாலைக்கு கோரிக்கை
ஒடுகத்தூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள கொய்யா ஜூஸ் தொழிற்சாலை அமைத்து அங்கு வசிக்கக் கூடிய ஏழை, எளிய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அமைத்து தர வேண்டும் என்று சட்டமன்ற கூட்டத்தொடரில் அணைக்கட்டு எம்எல்ஏ ஏபி.நந்தகுமார் கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் தமிழக அரசு இதுவரையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஒடுகத்தூர் பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இடைத்தரகர்கள் தான் பயனடைகின்றனர்
தமிழ்நாட்டில் கொய்யாவுக்கு தாயகமாக உள்ள ஒடுகத்தூர் பகுதியில் விளையும் கொய்யாவானது பெங்களூர், சென்னை, கேரளம், ஆந்திரா, தெலங்கானா, போன்ற பல பெரிய நகரங்களுக்கு இடைத்தரகர்கள் மூலமாக விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. அதனை அனைவரும் விரும்பி வாங்கி செல்கின்றனர். இதன்மூலம் இடைத்தரகர்கள் லட்சக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். ஆனால் கொய்யா உற்பத்தி செய்த விவசாயிக்கு அதில் லாபம் கிடைப்பதில்லை. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Odugathur Corona ,Harvesting , Odugathur, guava sale, corona, farmers
× RELATED மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி