×

குளச்சலில் ராட்சத அலையில் சிக்கிய 5 மீனவர்கள் குமரியில் 2 வது நாளாக தொடரும் கடல் சீற்றம்

குளச்சல்: குளச்சலில் நேற்று கடல் சீற்றம் காரணமாக, அலை தடுப்பு சுவரில் நின்ற 5 மீனவர்கள் அலையில் சிக்கினர். ஒருவர் கடலுக்குள் விழுந்து பத்திரமாக மீட்கப்பட்டார். குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை மற்றும் சூறைகாற்றுடன், கடல் சீற்றமும் ஏற்பட்டு வருகிறது.  கடல் சீற்றத்தில் சிக்கி மீனவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தும் வருகிறார்கள்.  நேற்று முன்தினம் வெள்ளிச்சந்தை அருகே அழிக்காலில் எழுந்த ராட்சத அலைகளால் மேற்கு தெருவில் ஊருக்குள் கடல் நீர் புகுந்தது. பிரதீப் அஸ்வின் (27) என்ற வாலிபர் ராட்சத அலையினால் காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்து,  பலியானார். 2 சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற ஆர்.டி.ஓ. மயில் மற்றும் தாசில்தார் அப்துல் மன்னா ஆகியோரை மீனவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கடல் நீர் ஊருக்குள் வருவதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். பின்னர் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி  சமரசம் செய்தனர். கடல் சீற்றத்தால் மக்கள் விடிய, விடிய தூங்காமல் தவித்தனர்.  நேற்று (ஞாயிறு) மாலை அழிக்காலில் மீண்டும் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுவர் இடிந்து விழுந்து பலியான, பிரதீப் அஸ்வின் குடும்பத்துக்கு 30 லட்சம் வழங்க வேண்டும். காயமடைந்த சிறுவர்கள் குடும்பத்துக்கு 1லட்சம் வழங்குவதுடன், அவர்களுக்கான சிகிச்சை செலவை அரசே ஏற்க வேண்டும். தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும் என்றனர்.

இது பற்றி அறிந்ததும் குளச்சல் ஏ.எஸ்.பி. விஸ்வேஸ் பி. சாஸ்திரி, தாசில்தார் அப்துல் மன்னா மற்றும் அதிகாரிகள் சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த நிலையில், நேற்று குளச்சலிலும் கடல் சீற்றமாக காணப்பட்டது. மீன்பிடி துறைமுகத்தின் மேற்கு அலை தடுப்பு சுவரை தாண்டி ராட்சத அலைகள் எழுந்தன. அப்போது சுவர் மீது நடந்து சென்று கொண்டிருந்த 5 மீனவர்களும் ராட்சத அலையில் சிக்கினர். இதில் சைரஸ் (34) என்பவர் அலையில் சிக்கி தூக்கி வீசப்பட்டார். அவர் துறைமுகத்திற்குள் விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக படுகாயத்துடன் உயிர் தப்பினார். உடன் சென்ற மீனவர்கள் அவரை மீட்டு நாகர்கோவிலில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இந்த சம்பவத்தில் அந்த பகுதியில் நின்ற 5 பைக்குகளும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டன.

இது தவிர துறைமுகத்திற்குள் கடல் சீற்றத்தில் சேதமடைந்து மீட்கப்படாமல் அலை தடுப்பு சுவரில் மோதி நின்ற ஒரு விசைப்படகு நேற்று எழுந்த ராட்சத அலையினால் மேலும் சேதமடைந்து மூழ்கும் நிலைக்கு சென்றது. சிங்காரவேலர் காலனியில் எழுந்த ராட்சத அலைகளினால் மணலரிப்பு ஏற்பட்டு அப்பகுதி வீடுகளில் கடல் நீர் புகும் அபாயம் ஏற்பட்டது. குறும்பனை சகாய மாதா தெருவில் கடலரிப்பு ஏற்பட்டு அப்பகுதி வீடுகள் கடலில் சரியும் நிலையில் உள்ளது. அங்கு அமைக்கப்பட்ட தூண்டில் வளைவில் சுமார் 15 மீட்டர் தூரத்திற்கு கற்கள் சரிந்து கடலில் விழுந்தன.
கோடிமுனை மேற்கு பகுதியில் கடலரிப்பினால் சாலையின் ஒரு பகுதி உடைந்து கடலில் விழுந்தது. இதனை சீரமைத்து அப்பகுதி வீடுகளை பாதுகாக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பிரின்ஸ் எம்.எல்.ஏ. ஆய்வு
குளச்சல் சிங்காரவேலன் காலனியில் கடலரிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரின்ஸ் எம்.எல்.ஏ., பங்கு தந்தையர்கள் மரிய செல்வன், கஸ்பார், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் எனல்ராஜ் மற்றும் ஊர் நிர்வாகிகள் பார்வையிட்டனர். பிரின்ஸ் எம்.எல்.ஏ. கூறுகையில்,  ஆண்டுதோறும் கடல் சீற்றத்தின்போது குறும்பனை, கோடிமுனை கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இப்போது குளச்சல் சிங்கார வேலர் காலனியிலும் கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதனை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க மாவட்ட கலெக்டரை சந்தித்து முறையிடுவேன் என்றார்.

கான்கிரீட் சாலை உடையும் அபாயம்
இரையுமன்துறை முதல் நீரோடி வரையுள்ள மீனவ  கிராமங்களில்  கடலரிப்பு தடுப்பு சுவர் பலமான முறையில்  அமைக்கப்பட்டுள்ளதால் அலை  சீற்றத்தில் ஏற்படும் நீரோட்டம் தடுத்து  நிறுத்தப்படுகிறது. அதே நேரம்  கடலின் நீரோட்டம் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தை  நோக்கி சென்று   கடலுக்கும், துறைமுகத்திற்கும்  இடைவெளி  வழியாக பேரலையாக மாறி புகுந்த வண்ணம் உள்ளது.  தற்போது இந்த பேரலைகள் துறைமுக  முகத்துவாரத்தில் இருபக்கமும்  அமைந்துள்ள தடுப்புச் சுவர்களை தாக்கி  சின்னா பின்னமாக்கி வருகிறது.

நேற்று  முன்தினம் இரவு  ஏற்பட்ட  பேரலை  இரயுமன்துறையிலிருந்து  துறைமுக முகத்துவாரத்திற்கு செல்லும்  கான்கிரீட் சாலையை உடைத்து புரட்டி  போட்டுள்ளது. இந்த அலை சீற்றம்  இன்னும் ஒரு வார காலம் தொடருமானால்  இரையுமன்துறையிலிருந்து  துறைமுக  முகத்துவாரம் செல்லும் கான்கிரீட்  சாலை முழுவதும் உடைத்து விடும் அபாயம் உள்ளதாக, மீனவர்கள் கூறினர்.

சொத்தவிளையில் கடலரிப்பு
நாகர்கோவில் அடுத்த சொத்தவிளையிலும் கடலரிப்பு காரணமாக சாலை அரிக்கப்பட்டுள்ளது. தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் சாலை உள்ளது.  நேற்று ஊரடங்கால் யாரும் கடற்கரைக்கு வர வில்லை. கடல் சீற்றத்தால் சேதம் எதுவும் ஏற்பட வில்லை என்று அந்த பகுதி பொதுமக்கள் கூறினர்.

உடலை வாங்க மறுப்பு
அழிக்காலில் கடல் சீற்றத்தால் உயிரிழந்த  பிரதீப் அஸ்வின் உடல் நேற்று ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் உரிய நிவாரணம் கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் கூறி சென்றனர். இதனால் பிரேத பரிசோதனை முடிந்து, பிரதீப் அஸ்வின் உடல் பிணவறையில் வைக்கப்பட்டு இருந்தது.

Tags : fishermen ,Kulachal Sea ,Kumari , Puddle, wave, 5 fishermen, Kumari, sea rage
× RELATED பா.ஜ நிர்வாகிகளை விரட்டியடித்த மீனவர்கள்