×

சென்னை காசிமேடு மீனவர்கள் 10 பேர் மாயம்!: 20 நாட்களாக கரைக்கு திரும்பாததால் உறவினர்கள் அதிர்ச்சி..மீனவர்களை கண்டுபிடிக்க அரசுக்கு கோரிக்கை..!!

சென்னை: சென்னை காசிமேடு மீனவர்கள் 10 பேர் 20 நாட்களாகியும் கரை திரும்பவில்லை என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கடந்த மாதம் 22ம் தேதி மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இதுவரை கரைதிரும்பாததால் உறவினர்கள் காசிமேடு மீன்பிடி உதவி இயக்குனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். கடந்த 5 மாதங்களாக நீடிக்கும் ஊரடங்கு உத்தரவினால் காசிமேட்டில் குறைந்தளவு விசைப்படகுகள் மட்டுமே கடலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து 50 படகுகள் மட்டுமே அனுமதி அளித்திருந்தார்கள்.

காசிமேடு நாகூரார் தோட்டத்தை சேர்ந்த பாலாஜி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் திருவெற்றியூர்குப்பம், திருச்சினாங்குப்பம் பகுதியை சேர்ந்த பார்த்திபன், லட்சுமணன், சிவகுமார், பாபு உள்ளிட்ட 10 மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். ஜூலை 22ல் கடலுக்கு சென்ற மீனவர்கள் 7 நாட்களில் கரை திரும்பி இருக்க வேண்டும். ஆனால் 20 நாட்கள் ஆகியும் மீனவர்கள் கரைக்கு திரும்பாததால் உறவினர்கள் அச்சமடைந்துள்ளனர். அவர்கள் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. தகவல் தொழில்நுட்ப கருவியான ஜிபிஎஸ் கருவியிலும் தகவல் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விசைப்படகு உரிமையாளர் பாலாஜி மற்றும் மீனவர்களின் உறவினர்கள் காசிமேடு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். கடந்த வாரம் கடல் காற்று அதிகமாக வீசப்பட்டதால் படகு திசைமாறி சென்றதா அல்லது வேறு ஏதேனும் சம்பவம் நிகழ்ந்துள்ளதா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் மாயமான மீனவர்களை ஹாலிகாப்டர் உதவி கொண்டு தேடுமாறு அரசுக்கு மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : fishermen ,Relatives ,Kasimedu ,Chennai ,government , fishermen ,Chennai, Kasimedu , fishermen ,
× RELATED காசிமேடு அருகே மீன் பிடித்தபோது...