×

கேரள தங்கக்கடத்தல் வழக்கு!: ஸ்வப்னா சுரேஷ் தாக்கல் செய்திருந்த ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது கொச்சி என்.ஐ.ஏ. நீதிமன்றம்..!!

திருவனந்தபுரம்: கேரள தங்கக்கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷின் ஜாமின் மனுவை கொச்சி என்.ஐ.ஏ. நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. கேரளாவில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்ட சம்பவத்தை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதில் முன்னாள் தூதரக ஊழியர்களான சரித், ஸ்வப்னா சுரேஷ் உள்பட 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ஸ்வப்னா சுரேஷ் கொச்சியில் உள்ள சிறப்பு கோர்ட்டில் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார்.

முன்னதாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, என்.ஐ.ஏ. சார்பில் துணை சொலிசிட்டர் ஜெனரல் விஜயகுமார் ஆஜராகி ஸ்வப்னா சுரேசின் ஜாமினுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில், மீண்டும் இந்த மனு மீதான வழக்கு விசாரணைக்கு வந்த போது, கேரள தங்கக்கடத்தல் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. அறிக்கை தாக்கல் செய்திருந்தது. அதில், கேரள முதல்-மந்திரி அலுவலகத்தில் இவர் மிகப்பெரிய செல்வாக்கு பெற்றிருந்தார். அரசின் விண்வெளி பூங்கா திட்டத்திலும் இவருக்கு மிகப்பெரிய பங்களிப்பு உள்ளது. மேலும் தூதரக பார்சலை பெறுவதற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர் வீட்டிற்கும் ஸ்வப்னா சென்றுவந்துள்ளார்.

ஸ்வப்னா சுரேஷுக்கு முதல்வர் பிரனாயி விஜயன் நன்றாக தெரியும் என்பதால் இந்த வழக்கில் அவருக்கு ஜாமின் அளிக்கக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தது. அதன் அடிப்படையிலேயே தங்கக்கடத்தலில் ஸ்வப்னா சுரேஷுக்கு தொடர்பு உள்ளதற்கான அடிப்படை ஆதாரங்கள் உள்ளதால் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து கொச்சி என்.ஐ.ஏ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சூழலில் துபாயில் உள்ள பைசல் பரீதை விசாரிப்பதற்காக 2 பேர் அடங்கிய குழு துபாய் செல்லவிருக்கிறது. அவர் இந்தியா அழைத்து வரப்பட்ட பின்னரே மேற்கொண்டு விவரங்கள் தெரியவரும்.

Tags : Kochi NIA ,Kerala ,court ,Swapna Suresh ,bail plea Court , Kerala gold smuggling ,Kochi NIA, Swapna Suresh's bail plea ,
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...