×

தொடர் மழையால் புல்லாவெளி அருவியில் கொட்டுது தண்ணீர்: காமராஜர் நீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு

பட்டிவீரன்பட்டி: தொடர் மழையால் பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளி அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. இதனால், காமராஜர் நீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை, புல்லாவெளி, மஞ்சள்பரப்பு, கானல்காடு, தடியன்குடிசை, கல்லாங்கிணறு மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைக்கிராமங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலைப்பகுதியில் பல இடங்களில் ஊற்றுநீர் பெருக்கெடுத்துள்ளது. இதனால், குடகனாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து புல்லாவெளி அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்த நீர்வீழ்ச்சியில் இருந்து திண்டுக்கல்லுக்கு குடிநீர் ஆதாரமான காமராஜர் நீர்தேக்கத்திற்கு தண்ணீர் வரும். இந்த நீர்த்தேக்கம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள 10க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கும், ஆத்தூர், நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த அருவி பசுமையான பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதியில் சாம்பல் நிற அணில், மான், காட்டுமாடு, புலி போன்ற வன விலங்குகள் உள்ளன.

பாதை வசதி இல்லாத அருவிபட்டிவீரன்பட்டி அருகே உள்ள சித்தரேவு மலையடிவாரத்திலிருந்து 13 கீ.மீ தூரத்தில் புல்லாவெளி அருவி உள்ளது. இந்த அருவிக்குச் செல்ல பாதை வசதி கிடையாது. அருவி விழும் பகுதி 300 அடி பள்ளத்தாக்கு நிறைந்த ஆபத்தான பகுதியாகும். இந்த அருவியில் குளிக்க வந்து, குடிபோதையில் பலர் பலியாகியுள்ளனர்.  இதனை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 


Tags : Kamaraj Reservoir ,Pullaveli Falls , Continuous Rain, Pullaveli Falls, Water, Kamaraj Reservoir
× RELATED கல்வராயன்மலையில் கனமழை கோமுகி அணையில் இருந்து 1300 கனஅடி நீர் வெளியேற்றம்