×

மழையில் சின்னாபின்னமானது கண்ணன்கோட்டை புதிய கால்வாய்

ஊத்துக்கோட்டை: கும்மிடிப்பூண்டி ஒன்றியம் கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை கிராமங்களை இணைத்து ரூ.330 கோடி செலவில் புதிய நீர்த்தேக்கம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான பணிகள் கடந்த 2014ம் ஆண்டு பொக்லைன் இயந்திரங்கள் மூலம் விவசாய நிலங்களை அழித்து பணிகள் தொடங்கியது. இதற்கு அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். அதன்பிறகு, பாதிக்கப்பட்ட விவசாயிகள் நீதிமன்றத்தில், விவசாயிகளுக்கு 4 மடங்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 4 மடங்கு நிவாரணம் வழங்கிய பிறகுதான் கண்ணன்கோட்டையில்  நீர்த்தேக்க பணிகள் தொடங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதனால், அந்த பகுதியில் மட்டும் பணிகள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா தண்ணீர் திறக்கப்பட்டால் அந்த தண்ணீர் தாமரைக்குப்பம் பகுதியிலிருந்து, திருப்பிவிடப்பட்டு கரடிபுத்தூர் வழியாக கண்ணன்கோட்டை நீர்தேக்கத்திற்கு செல்லும் கால்வாய் பணிகள் மட்டும் கடந்த சில மாதங்களாக கிடப்பில் போடப்பட்டு இருந்தது. பின்னர், ஊத்துக்கோட்டை தொம்பரம்பேடு பகுதியில் இருந்து கண்ணன் கோட்டைக்கு செல்லும் கால்வாய் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் தமிழக தலைமை செயலாளர் இந்த பணிகளை பார்வையிட்டு சென்றார். இதற்கிடையில், கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த மழையால் தாமரைக்குப்பம் - கண்ணன்கோட்டை இடையில் செஞ்சியகரம் பகுதியில் கால்வாய் அமைக்கப்பட்டு ஓராண்டு ஆன நிலையில் சிமெண்ட் சிலாப்புகள் உடைந்து சேதமடைந்தது. மேலும், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் தாமரைக்குப்பம் பகுதியில் கால்வாயில் கரையோர மண் சரிந்து கால்வாய் தூர்ந்து விட்டது. மேலும், கரைகளும் ஆங்காங்கே சேதமடைந்து கிடக்கிறது.

* சீரமைக்க வேண்டும்
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘தாமரைக்குப்பம் பகுதியில் இருந்து கண்ணன்கோட்டைக்கு செல்லும் வழியில் தாமரைக்குப்பம் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழைக்கு சிமெண்ட் கால்வாய் சேதமடைந்து விட்டது. ஒரு சில இடங்களில் கரை ஓரம் உள்ள மண் சரிந்து கால்வாய் தூர்ந்து விட்டது. இதை சீரமைக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Chinnapinna ,canal ,Kannankottai , rain, Chinnapinna, Kannankottai, New Canal
× RELATED திருப்பூர் ஆண்டிபாளையம் குளம் மழையால் நிரம்பி வழிகிறது