×

பூஜ்ஜியத்திலிருந்து தொடங்க வேண்டும்... கோஸ்வாமி ஆதங்கம்

புதுடெல்லி: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில் இனி பூஜ்ஜியத்தில் இருந்து தான் தொடங்க வேண்டும் என்று இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஜுலன் கோஸ்வாமி தெரிவித்தார்.
நியூசிலாந்தில் 2021ம் ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறுவதாக இருந்த இத்தொடர், கொரோனாவால் 2022ம் ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த தொடருடன் ஓய்வு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி மூத்த வீராங்கனைகள் கேப்டன் மித்தாலி ராஜ், பந்துவீச்சாளர் ஜுலன் கோஸ்வாமி ஆகியோர் மேலும் ஓராண்டு காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜுலன் கோஸ்வாமி கூறியதாவது: கடந்த நான்கைந்து மாதங்களாக நாங்கள் எந்த கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவில்லை. பெரும்பாலான அணிகள் தயாராக இல்லாத நிலையில் போட்டி தள்ளிவைக்கப்பட்டது மிகச் சரியான முடிவுதான். உலக கோப்பைக்கு ஏறக்குறைய 18 மாதங்கள் இருக்கின்றன. நிறைய அவகாசம் உள்ளது. போட்டி திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதற்காகத்தான் நாங்கள் தயாராகி இருந்தோம். இனியும் அது பற்றிப் பேசி பயனில்லை. அடுத்து நடைபெற உள்ள தொடர்கள் குறித்து மட்டுமே யோசிக்க வேண்டும். அதற்காக தான் தயாராக வேண்டும்.

நவம்பரில் நடைபெற உள்ள பெண்களுக்கான டி20 போட்டி தொடரும் ஒரு முக்கியமான தொடராக இருக்கும். பயிற்சிக்கு தயாராக வேண்டும். நான் வசிக்கும் பகுதியில் பயிற்சிக்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. மழைக்காலம் வேறு தொடங்கியிருக்கிறது. இதற்கிடையில்தான் பயிற்சியை பற்றி யோசிக்க வேண்டும். அதாவது இனி பூஜ்ஜியத்தில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். அதைத்தான் நான் செய்யப் போகிறேன். இப்போது தொடங்கும் பயிற்சி எல்லாம் இனி வரும் தொடர்களுக்கானது. இடையில் என்ன நடக்கும் என்று சொல்ல இயலாது. ஆனாலும் முயற்சியை கட்டாயம் தொடர்வேன். இந்திய அணியில் இடம்பெறுவது மிகப்பெரிய கவுரவம். அதை தக்கவைத்துக்கொள்ள எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வேன்.

Tags : Zero, to begin with, Goswami, Adangam
× RELATED சென்னையில் ஐ.பி.எல். போட்டி; ஏப்.25ல் டிக்கெட் விற்பனை..!!