×

முழு ஊரடங்கை முன்னிட்டு நேற்று முன்தினமே வீட்டில் ஸ்டாக் ஒரே நாளில் ரூ.189 கோடிக்கு மதுவிற்பனை: மதுரை மண்டலம் முதலிடம்

சென்னை: ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை முன்னிட்டு நேற்று முன்தினம் ஒரே நாளில் தமிழகத்தில் ரூ.189.43 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் 6ம் கட்ட ஊரடங்கின்போது ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்தநிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஆகஸ்ட் 31ம் தேதி வரையில் 7ம் கட்டமாக ஊரடங்கை நீட்டித்து அரசு அறிவித்தது. கடந்த ஊரங்கை போன்றே இந்த முறையும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. அப்போது, மருந்து, பால் கடைகள் தவிர்த்து அனைத்து தனிக்கடைகளும் மூடப்படும். அந்தவகையில், வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் செயல்படாது என அரசு தெரிவித்திருந்தது.

இதனால், நேற்று கடைகள் மூடப்பட்டதையடுத்து நேற்று முன்தினம்(சனிக்கிழமை) டாஸ்மாக் கடைகளில் விற்பனை அமோகமாக இருந்தது. குடிமகன்கள் முன்டியடித்துக்கொண்டு மது வாங்கிச்சென்றனர். குறிப்பாக, திருச்சி, மதுரை மண்டலங்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், முன்எப்போதும் இல்லாத வகையில் நேற்று முன்தினம் விற்பனை அதிகரித்தது. அதன்படி, சென்னை மண்டலத்தில் ரூ.22.56 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.41.67 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.41.20 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.39.45 கோடிக்கும், அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.44.55 கோடிக்கும் மதுவிற்பனை நடைபெற்றுள்ளது.

மொத்தமாக ரூ.189.43 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றது. கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி(சனிக்கிழமை) ரூ.188.86 கோடிக்கு நடைபெற்ற மதுவிற்பனையே உட்சபட்ச மதுவிற்பனையாக இருந்தது. இந்தநிலையில், நேற்று முன்தினம் ரூ.189.43 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா ஊரடங்கிற்கு முன்பாக வாரம் தோறும் சனிக்கிழமைகளில் ரூ.80 முதல் ரூ.90 கோடி வரையில் மட்டுமே விற்பனை நடைபெறும். ஆனால், தற்போது ரூ.180 கோடிக்கும் மேல் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் மதுவிற்பனை நடைபெறுகிறது. வரக்கூடிய வாரங்களில் இது அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.


Tags : curfew ,home ,region ,Madurai ,zone , Full Curfew, Preceded, Yesterday, Home Stock, Rs.
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...