×

மாவட்டத்தில் பரவலாக மிதமான மழை: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலாக பெய்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். காஞ்சிபுரத்தில் கடந்த சில வாரங்களாக வெயில், மேகமூட்டம் என மாறிமாறி இருந்து வருகிறது. மேலும் வெயிலின் தாக்கம் குறைந்து ஓரளவு பரவலாக மழை பெய்து வருவதால் காஞ்சியில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.  இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு பலத்த சூறைக்காற்றுடன் காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்தது. இதனால் காஞ்சிபுரத்தில் பல இடங்களில் பாதாள சாக்கடை அடைப்பால் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. காஞ்சிபுரத்தில் மூங்கில் மண்டபம், கங்கைகொண்டான் மண்டபம், ரங்கசாமி குளம், கீரை மண்டபம் உள்ளிட்ட பகுதியில் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோன்று, வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நேற்று காலை 6 மணி நிலவரப்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழையளவு விவரம் (மி.மீ)
காஞ்சிபுரம் -     17.20
ஸ்ரீபெரும்புதூர் -     10.40
உத்திரமேரூர் -       7.80
வாலாஜாபாத் -     12.00
செம்பரம்பாக்கம் -     21.00
செய்யூர்: செய்யூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு இடியுடன் கூடிய கனமழை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செய்யூர் தாலுகாவிற்கு உட்பட்ட சூனாம்பேடு, கடப்பாக்கம், பவுஞ்சூர், சித்தாமூர், வெண்ணாங்குபட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் நேற்று முன்தினம் இரவு திடீரென கருமேகங்கள் சூழ்ந்து இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இரவு 10 மணி அளவில் துவங்கிய மழை விடியற்காலை 3 மணி வரையில் பெய்தது. செய்யூர் தாலுகா பகுதிகளில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகள் மழைநீரால் கணிசமாக உயர்ந்துள்ளன. இதனால், விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சடைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரையில் செய்யூர் தாலுகா பகுதியில் மட்டும் அதிகபடியாக 74 மி.மீ. மழை பதிவாகி இருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட பொதுப்பணி நீர்வளத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Tags : district , district, moderate rain, farmers, public, delight
× RELATED மலை மாவட்ட சிறு விவசாய சங்கத்தினர்...