×

அணைகளுக்கு நீர்வரத்து உயர்வு மின்உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு

சென்னை: தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தமிழகத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், நீர்மின்நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தின் அளவு மேலும் உயர வாய்ப்புள்ளது. தமிழகத்தில் வீடு, தொழிற்சாலை, விவசாயம் என பல்வேறு பிரிவுகளில் 3 கோடிக்கும் அதிகமான மின்இணைப்புகள் உள்ளன. இவற்றுக்கு தேவையான மின்சாரம் அனல், காற்றாலை, நீர், சூரியசக்தி போன்றவற்றின் மூலமாக கிடைக்கிறது. அந்தவகையில் தமிழகத்தில் நீர் மின்நிலையங்கள் கோவை, நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் 2 ஆயிரம் மெகாவாட்டிற்கும் மேல் அமைக்கப்பட்டுள்ளன. மழை பெய்யும் காலங்களில் அணைகளுக்கு நீர்வரத்து அதிகமாக இருக்கும் என்பதால், அப்போது நீர்மின்நிலையங்களில் அதிக அளவில் மின்உற்பத்தி செய்யப்படும்.

இந்நிலையில் தற்போது கர்நாடகாவில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அணைகளில் இருந்து நீர் அதிகளவு திறந்து விடப்படுகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர் அதிக அளவில் வருகிறது. இதேபோல் தமிழகத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பலஇடங்களில் மேலும் சில தினங்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுபோன்ற காரணங்களினால் தமிழகத்தில் உள்ள அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும் நிலை உள்ளது. எனவே, இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவும் உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் நிலவரப்படி 1,082 மெகாவாட் அளவிற்கு நீர்மின்நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு மேலும் உயர்வதற்கான வாய்ப்புள்ளது.


Tags : Dam, water level rise, increase power generation, opportunity
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...