×

மூணாறு அருகே நிலச்சரிவில் சிக்கிய மேலும் 17 பேரின் சடலங்கள் மீட்பு: பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு

திருவனந்தபுரம்: மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய மேலும் 17 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து, பலி எண்ணிக்கை 43 ஆக உயர்ந்து உள்ளது. கேரள மாநிலம், மூணாறு அருகே பெட்டிமுடி நிலச்சரிவில் சிக்கி 80க்கும் மேற்பட்ட தமிழக தோட்டத் தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்தனர். கடந்த 2 நாளாக போலீஸ், தீயணைப்புப்படை, வனத்துறை, தேசிய பேரிடர் மீட்புப்படையினர் பொது மக்களின் உதவியுடன் 12 பேரை உயிருடனும், 26 பேரை  சடலமாகவும் மீட்டனர். 26 பேர் சடலங்களும் பிரேத பரிசோதனைக்கு பிறகு அருகில் உள்ள மைதானத்தில் தோண்டப்பட்ட 3 குழிகளில் ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று 3வது நாளாக மீட்பு பணி நடந்தது. இதில், 200 பேர்  ஈடுபட்டனர். கேரள அமைச்சர்கள் சந்திரசேகரன், மணி ஆகியோர் மூணாறில் முகாமிட்டு மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர். இதில், 17 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து, பலியானவர்கள் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. காலநிலை மோசமானதால் நேற்று மாலை 6 மணியுடன் மீட்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இன்னும் மண்ணுக்கடியில் 30 பேரின் சடலங்களாவது  இருக்கும் என கருதப்படுகிறது. இவர்களை தேடும் பணி இன்று தொடர்ந்து நடைபெறும்.

நிலச்சரிவு நடந்தபோது வீடுகளில் 78 பேர் இருந்ததாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தொழிலாளர்களின் உறவினர்கள் சிலர் தமிழகத்தில் இருந்து வந்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால், வீடுகளில் 83 ேபர் இருந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். வனத்துறையினர் மாயம்: பாதுகாக்கப்பட்ட சோலை வனப்பகுதியில்தான் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கலாம் என்று வனத்துறை கருதுகிறது. இந்த நிலச்சரிவில் வனக்காவலர்களான மணிகண்டன், அச்சுதன், ராஜா, டிரைவர்களான கணேசன், மயில்சாமி ஆகியோர் காணாமல் போய் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுதவிர வனத்துறை பெண் ஊழியரான ரேகா என்பவரும் காணாமல் போயிருந்தார். அவரது சடலம் பின்னர் கிடைத்தது. தீயணைப்பு வீரருக்கு கொரோனா: மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில், நேற்று மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த ஆலப்புழாவை சேர்ந்த ஒரு தீயணைப்பு வீரருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவருடன் ஒன்றாக மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தனிமையில் செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

* புதைந்தது 80 பேரா?
மூணாறு பெட்டிமுடி நிலச்சரிவில் புதையுண்டவர்கள் கம்பெனி கணக்குப்படி 4 லயன்ஸ் வீடுகளில் 71 பேர் என்கின்றனர். ஆனால் விடுமுறைக்கு வந்தவர்கள், உறவினர்கள் என இதன் எண்ணிக்கை 80க்குள் இருக்கும் என்று கூறப்படுகிறது. எத்தனை பேர் புதைந்தார்கள் என தெரியாமலேயே தேடுதல் பணிகள் நடப்பது அதிர்வலைகளை உண்டாக்கி உள்ளது. இதே மழை நீடித்தால் பெட்டிமுடியில் எத்தனை பேர் இறந்தனர், எத்தனை பெண்கள், குழந்தைகள் சிக்கினர் என்று அறிவிப்பதற்கு இன்னும் 2 நாட்கள் ஆகலாம் என கூறப்படுகிறது.

* மழையால் தோன்றிய திடீர் நீர்நிலைகள்
பெட்டிமுடி எஸ்டேட்டில் வரலாறு காணாத மழை பெய்கிறது. இதனால் சடலங்களை தேட தோண்டும் குழிகளுக்குள் தண்ணீர் தேங்கி கொள்கிறது. மண்ணையும், தண்ணீரையும் மாறி மாறி அள்ளி தேடி வருகின்றனர். தற்போதைய கனமழைக்கு புதிதாக 4 ஓடைகள் தோன்றி ராஜமலை ஆற்றுப்பகுதியில் வெள்ளம் ஓடுகிறது.

* கண்ணீருடன் காத்திருப்பு
கொட்டும் மழை ஒருபுறம் இருந்தாலும் நேற்று சூறைக்காற்றும் சுழன்றடித்தது. சூறைக்காற்றிலும் குடையை பிடித்துக் கொண்டு, தங்களது உறவினர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பி இருப்பார்களா என்ற ஆசையில் மக்கள் காத்து கிடந்தனர். சடலங்களை தூக்க தூக்க கூடியிருந்த உறவினர்கள் தங்களது சொந்தக்காரரா என ஓடி ஓடி வந்து பார்த்தது கண்ணீரை வரவழைப்பதாக இருந்தது. இதில் மிகவும் சோகமான விஷயம், தமிழகத்தில் உள்ள ராஜபாளையம், கயத்தாறு பகுதிகளை சேர்ந்தவர்கள், எந்த செல்போனும் சிக்னலும் கிடைக்காத நிலையில் தங்கள் உறவினர்கள் பற்றி யாரிடம் கேட்பது என தவியாய் தவிக்கின்றனர்.  

* கொரோனாவை மறந்த மனிதநேயம்
கேரளாவில் கொரோனா பரவல் இருந்தாலும், பெட்டிமுடியில் மனிதம் மட்டுமே களமாடி வருகிறது. மீட்புக்குழுவினர் பாதுகாப்பான உடைகளை அணிந்திருந்தாலும், இவர்களை தூக்கி செல்லும் மக்கள் கொரோனாவை மறந்து கண்ணீருடன் தேடுகின்றனர். மாலை 6 மணிக்கெல்லாம் மீட்பு பணிகள் நிறுத்தப்படுகின்றன. காரணம் கொட்டும் மழை, வெளிச்சமின்மை, மீட்பவர்களுக்கு பாதுகாப்பு இல்லாமை போன்றவை தடையாக உள்ளன.

* 19 மாணவர்கள் மண்ணில் சிக்கினர்
மண்ணுக்கு அடியில்  சிக்கியவர்களில் 19 பேர் பள்ளி மாணவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் பெயர் விபரம் வருமாறு, லாவண்யா,ஹேமா,வித்யா, வினோதினி, ஜனனி, ராஜ லெட்சுமி, பிரிய தர்ஷினி, ஜெகதீஸ்வரி, விஷால், லெட்சுமி ஸ்ரீ,அஸ்வந்த் ராஜ், லக்னஸ்ரீ, விஷ்ணு,விஜய லட்சுமி, ஜோஸ்வா,சஞ்சய், சிந்துஜா, சிவரஞ்சனி, கவுசிகா. இவர்களில் சஞ்சய், சிந்துஜா உடல்கள் கிடைத்துள்ளன. மற்ற மாணவர்களின் நிலை என்ன? என்பது குறித்து உடனடியாக தகவல் இல்லை.

Tags : Recovery ,landslide ,Bodies ,Munnar , Three, landslide, 17 people, bodies recovered, death toll rises to 43
× RELATED திருவொற்றியூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் 2 பேர் சடலமாக மீட்பு