×

நோய்க்கிருமி பரப்புதல், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தும் பேரழிவை தரும் விதை ‘பார்சல்’ அச்சுறுத்தல்: மாநிலங்களுக்கு மத்திய வேளாண் அமைச்சகம் எச்சரிக்கை

புதுடெல்லி: நோய்க்கிருமி பரப்புதல், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பேரழிவை தரும் விதை ‘பார்சல்’ அச்சுறுத்தல் இருப்பதால், எச்சரிக்கையுடன் இருக்க மத்திய வேளாண் அமைச்சகம் மாநிலங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சீனாவின் வூகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், உலக நாடுகளை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. இதுவரை, பல லட்சம் பேர் பலியாகி விட்டனர். அமெரிக்கா, இந்தியா உட்பட உலக நாடுகளின் பொருளாதாரம் ஸ்தம்பித்து விட்டது. பொருளாதார இழப்புகளில் இருந்து அனைத்து நாடுகளும் மீண்டு வர, 2 முதல் 5 ஆண்டுகள் ஆகும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். இதற்கிடையே கொரோனா வைரசை தொடர்ந்து, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை அச்சுறுத்தும் புதிய ஆயுதத்தை சீனா கையில் எடுத்துள்ளது.

இதனால், விவசாயத்துக்கு பேரழிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அரசுக்கு பல்லுயிர் பெருக்கத்துக்கு ஊறு விளைவிக்கக் கூடிய விதை பார்சல்கள் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருவதாகத் தகவல் வந்துள்ளது. அதையடுத்து, மாநில அரசுகளும், விதை உற்பத்தி - ஆராய்ச்சி மையங்களும் கண்காணிப்புடன் இருக்க மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்து, மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘அமெரிக்கா, கனடா, பிரிட்டன், நியூசிலாந்து, ஜப்பான் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் பொதுமக்களுக்கு அறிமுகமில்லாத நபர்களிடம் இருந்து விதை பார்சல்கள் வந்ததாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

குறிப்பாக, அமெரிக்காவில் அறிமுகமில்லாத நபர்கள்களிடம் இருந்து பொதுமக்களுக்கு விதை பார்சல்கள் வந்துள்ளன. இதையறிந்த அந்நாட்டு வேளாண் அமைச்சகம், அவற்றை விதைக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த விதைகள் முளைத்து செடியாக வளர்ந்தால், அவை நோய்க்கிருமிகளை பரப்பலாம் அல்லது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்; மற்ற வேளாண் பயிர்களை நாசப்படுத்தலாம் அல்லது பல்லுயிர் பெருக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று அஞ்சப்படுகிறது. எனவே, மாநில வேளாண் துறைகள், மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள், விதைகள் உற்பத்தி மையங்கள், விதைகள் ஆராய்ச்சி மையங்கள் ஆகியவை சந்தேகத்துக்கிடமான விதை பார்சல்கள் வந்தால் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய விதை உற்பத்தி மையங்களின் கூட்டமைப்பின் இயக்குநர் ராம் கௌண்டின்யா கூறுகையில், ‘விவசாயிகளோ அல்லது விதை உற்பத்தி மையங்களோ யாரிடத்தும் கேட்காமலேயே வரும் விதைகளை நடுவதால் மனிதர்களுக்கு நோய்களோ அல்லது சுற்றுச்சூழலுக்கு பாதிப்போ வரவாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை வந்துள்ளது. இந்த அச்சுறுத்தலை புறக்கணித்துவிட முடியாது. விமான நிலையங்கள், துறைமுகங்களும் கண்காணிப்புடன் இருக்க வேண்டும்’ என்றாா்

Tags : states ,Federal Ministry of Agriculture ,Union Ministry of Agriculture , Dissemination of Pathogens, Environmental Impact, Seed ‘Parcel’, Ministry of Agriculture
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்