×

டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கு முறைவைக்காமல் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

வலங்கைமான்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சம்பா சாகுபடியை குறித்த காலத்தில் தடையின்றி துவங்கிடவும், வறண்டு கிடக்கும் குளம் உள்ளிட்ட நீர் நிலைகளை நிரப்ப முறைப்பாசனத்தை முடிவிற்கு கொண்டுவர விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். டெல்டா மாவட்ட பாசனத்திற்கு மேட்டூர் அணை கடந்த ஜூன் 12ம்தேதியும், அதனையடுத்து ஜூன் 16ம்தேதி கல்லணையும் திறக்கப்பட்டது. இந்நிலையில் மேட்டூருக்கு நீர்வரத்து குறைந்த நிலையில் குறுவை மற்றும் சம்பா சாகுபடியை கருத்தில் கொண்டு கடந்த 13ம்தேதி முதல் முறைப்பாசனத்தை பொதுப்பணித்துறை அறிவித்தது.

அதில் காவிரி கோட்டத்திற்கு ஆறு நாள் மற்றும் வெண்ணாறு கோட்டத்திற்கு ஆறுநாள் என்ற முறையில் முறைப்பாசனத்தை அறிவித்தது. பாசனத்திற்கு முறையாக தண்ணீர் வராத நிலையில் முறைப்பாசனம் அறிவித்து அதனை செயல்படுத்தி வருகின்றது. டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடியாக அதிகமழை மற்றும் வெள்ளத்தை தாங்கி வளரக்கூடிய, நூற்று ஐம்பது நாள் வயதுடைய நீண்டகால ரகத்தினை சாகுபடி செய்யவே விவசாயிகள் விரும்புவர். கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை மற்றும் தண்ணீர் இல்லாததால் குறுகிய கால ரகத்தினை சம்பா பட்டத்தில் விவசாயிகள் சாகுபடி செய்ய துவங்கினர்.

தற்போது பாசனத்திற்கு தண்ணீர் முன்னதாகவே திறக்கப்பட்டதாலும், தென்மேற்கு பருவ மழையைபோன்று வடகிழக்கு பருவமழையும் அதிகமாக இருக்கும் என விவசாயிகள் கருதுவதால் நடப்பு சம்பா பருவத்தில் கூடுதலாக நீண்டகால ரகத்தினை சாகுபடி செய்ய விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் மொத்த சம்பா சாகுபடி பரப்பளவில் ஆட்கள் பற்றாக்குறை மற்றும் நிர்வாகச் செலவு குறைவு போன்ற காரணத்தால் சுமார் முப்பது சதவீதம் நேரடி விதைப்பு மேற்கொள்ளப்படுவது வழக்கம். கடந்த சில நாட்களாக டெல்டா மாவட்டங்களில் வழக்கத்தை விட கூடுதலாக மழை தொடர்ந்து பெய்து வருகின்றது.

அதன் காரணமாக புழுதி உழவு மேற்கொள்ள முடியாத காரணத்தால் நேரடி விதைப்பு உரிய நேரத்தில் மேற்கொள்ள முடியாமல் போனது. தற்போது கர்நாடகத்தில் இருந்து உபரிநீர் மேட்டூர் அணைக்கு வருவதால் சம்பா சாகுபடி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனவே விதை விடும் பணியினை குறித்த நேரத்தில் துவங்க முறைவைக்காமல் கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும். மேட்டூர் அணை திறக்கப்பட்டு ஐம்பது நாட்களை தற்போது கடந்த நிலையில் போதிய தண்ணீர் வராததால் குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் தொடர்ந்து வறண்டு காணப்படுகின்றது.

எனவே மேட்டூர் அணையிலிருந்து கூடுதல் தண்ணீரை கொள்ளிடத்தில் திறந்து விடும் நடைமுறையை பின்பற்றாமல் அனைத்து பாசன மற்றும் வடிகால் ஆறுகளில் கூடுதலாக தண்ணீர் திறந்து அனைத்து நீர் நிலைகளையும் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : delta districts , Delta, samba cultivation, water, farmers
× RELATED தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும்...