×

கடவாசல் இஸ்லாமியர் தெருவில் புதிதாக சாலை அமைக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே கடவாசல் இஸ்லாமியர் தெரு சாலையை மேம்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே கடவாசல் ஊராட்சியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இதில் இஸ்லாமியர் தெருவில் மட்டும் சுமார் 70க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவுக்கு செல்லும் சாலை களிமண் சாலையாகவும், புதர்மண்டியும் கிடக்கிறது. இந்த சாலை மிகவும் பள்ளமாக உள்ளதால் மழை நீர் எளிதில் தேங்கி விடுகிறது. மழைக்காலத்திற்கு இத்தெருவுக்கு சென்று வரும் பள்ளி மாணவர்கள் மற்றும் பெரியவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.

மழை பெய்தால் இந்த சாலை சேறும் சகதியுமாகி விடுகிறது. இதனால் அனைவரும் அவதியடைந்து வருகின்றனர். இது வரை இந்த தெருவுக்கு செல்லும் சாலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இஸ்லாமியர் தெருவில் வசிக்கும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு மெயின்ரோட்டிலிருந்து இத்தெருவுக்கு செல்லும் மண் சாலையை மேம்படுத்தி உயர்த்தி தார் சாலை அல்லது சிமென்ட் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,Kadavasal Islamiyar Street , Gateway Islamist Street, Road
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி