×

திருக்கடையூர் அருகே ஆபத்தான நிலையில் மின் கம்பம்: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

தரங்கம்பாடி: திருக்கடையூர் அருகே ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தை உடனே மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே கிள்ளியூர் ஊராட்சி கீழ்மாத்தூர் -கிள்ளியூர் பிரதான சாலையில் கிள்ளியூர் வாய்க்கால் இணைப்பு பாலம் அருகில் விவசாய மற்றும் வீட்டு மின் இணைப்பிற்கு செல்லும் உயர்மின் அழுத்த மின்சார கம்பிகள் இணைக்கப்பட்ட மின் கம்பம் சூறைக்காற்று காரணமாக வாய்க்காலில் சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எதிர்வரும் வடகிழக்கு பருவமழை காலங்களில் மழை மற்றும் புயல் வீசினால் மின்கம்பம் வாய்க்காலில் விழுந்து உயிர் சேதம் ஏற்படும் என்று பொமக்கள் அச்சமடைகின்றனர்.

மேமாத்தூர், கீழமாத்தூர், கிள்ளியூர் மற்றும் டி.மணல்மேடு கிராமங்களில் வசிக்கும் மக்கள் அன்றாட பணிகளுக்கு திருக்கடையூர், பொறையார் மற்றும் செம்பனார்கோவில் செல்லவும், விவசாயிகள் அறுவடைக் காலங்களில் வேளாண் விளைபொருட்களான நெல், பஞ்சு மரவள்ளிக்கிழங்கு மற்றும் நிலக்கடலையை விற்பனை செய்ய ஏதுவாக இந்த சாலையே பயன்படுத்துகின்றனர். எனவே பொதுமக்கள் போக்குவரத்திற்கு இன்றியமையாத இச்சாலையில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் சாய்ந்து நிற்கும் உயர் மின்சாரம் செல்லும் மின்கம்பத்தை சரி செய்து தருமாறு பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tirukkadaiyur , Thirukkadaiyur, power pole
× RELATED சென்னை புளியந்தோப்பில்...