×

அனுமதியின்றி மீன் பிடித்தபோது தவறி விழுந்தார்; முதலை கடித்து குதறியதில் தொழிலாளி பலி: சாத்தனூர் அணையில் பயங்கரம்

தண்டராம்பட்டு: சாத்தனூர் அணையில் அனுமதியின்றி மீன்பிடித்தபோது தொழிலாளி தவறி விழுந்ததால் முதலை கடித்து குதறியதில் பலியானார். திருவண்ணாமலை மாவட்டத்தில் 119 அடி உயரமுள்ள சாத்தனூர் அணை உள்ளது. இந்த  அணையில் தற்போது 71 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. இதில் ஏராளமான முதலைகள் உள்ளன. சாத்தனூர் அணையில் மீன்களை பிடிக்க மீன்வளத்துறை சார்பில் ஏலம் விடப்பட்டு, ஏலதாரர்கள் மூலம் மீன்கள் பிடித்து விற்கப்படுகிறது. ஆனால் இந்த அணையில் பலர் அனுமதியின்றி இரவு நேரங்களில் மீன்களை பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில், தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் ஊராட்சி மதுரா புளியங்குளம் பகுதியை சேர்ந்த தொழிலாளி முருகேசன்(42) என்பவர், நேற்று அதிகாலை 5 மணியளவில் அனுமதியின்றி அணையில்  மீன்பிடிக்க தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். வட்டப்பாறை பகுதியில் மீன்களை பிடிக்க வலை வீசியுள்ளார். அப்போது தண்ணீரில் இருந்த முதலை திடீரென அவர் இடதுபக்க காலை பிடித்து இழுத்து சென்று கடித்து குதறியது. முதலையிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது, மீன் வலையில் சிக்கிக்கொண்டார். இதில் முருகேசன் நீரில் மூழ்கி பலியானார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த முருகேசனின் நண்பர்கள் கிராமமக்களிடம் சென்று தெரிவித்தனர்.

தகவலறிந்த சாத்தனூர் போலீஸ் எஸ்ஐ ஏழுமலை, விஏஓ வெங்கடேசன் மற்றும் கிராம மக்கள் விரைந்து வந்து தண்ணீரில் இறங்கி தேடினர். அப்போது முருகேசனின் சடலம் பாறைகளுக்கு இடையே சிக்கி இருந்தது. சடலம் பாறையில் சிக்கியதால் முதலையால் இழுத்துச்செல்ல முடியாமல் விட்டு சென்றுள்ளது. இதையடுத்து போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து இறந்த முருகேசனின் மனைவி கவிதா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Sathanur dam ,dam , Crocodile bite, worker, killed, Sathanur
× RELATED குல்லூர்சந்தை அணையில் கழிவுநீர்...