×

கடல் மீன் வரத்து குறைவால் அணை மீன் விலை அதிகரிப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மார்க்கெட்டிற்கு கடல் மீன்கள் வரத்து குறைவால், அணை மீன்களின் விலை அதிகரித்துள்ளது. பொள்ளாச்சி நகரில் காந்தி மார்க்கெட் ரோடு பகுதி மற்றும் நியூஸ்கீம் ரோடு, பல்லடம் ரோடு, பாலக்காடு ரோடு, மீன்கரை ரோடு என பல்வேறு பகுதிகளில் சுமார் 40க்கும் மேற்பட்ட மீன் கடைகள் செயல்படுகிறது. இந்த கடைகளுக்கு, பெரும்பாலும் பொள்ளாச்சி அருகே உள்ள அணைப்பகுதி மற்றும் கேரள அணைப்பகுதியிலிருந்தே மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.  அதுபோக, ராமேஸ்வரம் உள்ளிட்ட சில கடலோர பகுதியிலிருந்து கடல் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. மீன் வரத்தை பொறுத்து விலை நிர்ணயித்து விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் கடந்த மார்ச் மாதம் இறுதியிலிருந்து ஊரடங்கு காரணமாக, பல வாரத்திற்கு கடல் மீன் வரத்து இல்லாமல் அணை மற்றும் ஆற்றுப்பகுதியிலிருந்து பிடிக்கப்பட்ட மீன்களே விற்பனை செய்யப்பட்டன.
 கடந்த ஜூன் மாதத்திலிருந்து ஊரடங்கு தளர்வு ஓரளவு இருந்தாலும், கடல் மீன்களின் வரத்து எதிர்பார்த்த அளவில் இல்லாமல் போனது.

அதிலும் இந்த மாதம் துவக்கத்திலிருந்து தென்மேற்கு பருவமழை தீவிரத்தால்,  கடல் மீன்கள் வரத்து மீண்டும் குறைந்துள்ளது. இதில் நேற்று அணை மீன்களே வரத்து இருந்தாலும், இன்று முழு ஊரடங்கு என்பதால் கூடுதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையானது. இதில், கடல் மீன்களான மத்தி ஒரு கிலோ ரூ.260க்கும், செம்மீன் ரூ.550க்கும், அணை மீன்களான  டேம்பாறை ரூ.210க்கும், சிலேபி 170க்கும், கட்லா ரூ.180, நெய்மீன் ரூ.160க்கும் என கடந்த வாரத்தைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும், வரும் நாட்களில் கடல் மீன்கள் வரத்து மேலும் குறைந்தால், அணை மீன்களுக்கு தொடர்ந்து கிராக்கி இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : Increase ,dam fish prices,declining supply,marine fish
× RELATED குமரியில் தொடர் மழை அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு