×

ஐரோப்பாவின் நம்பர்-1ஐ முந்தினார் உலக பணக்காரர்கள் பட்டியலில் 4வது இடத்தில் முகேஷ் அம்பானி

புதுடெல்லி: ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, உலக பணக்காரர்கள் பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இந்தியாவின் நம்பர்-1 பணக்காரரான ரிலையன்ஸ் ஜியோ நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி, கால் பதிக்காத தொழில் துறைகளே இல்லை. கொரோனாவால் ஒட்டுமொத்த தொழில்துறைகள் பாதிப்பை சந்தித்த நிலையில், சர்வதேச அளவில் பெட்ரோல் பயன்பாடு பெருமளவு குறைந்தது. இதனால் கடந்த மார்ச்சில் முகேஷ் அம்பானியின் எரிசக்தி துறை தொழில் பங்குகள் சரிவை சந்தித்தன. ஆனாலும், டிஜிட்டல் துறை அவரை கைதூக்கி விட்டது. பேஸ்புக், கூகுள் என உலகின் முன்னணி நிறுவனங்கள் ரிலையன்ஸ் ஜியோவில் முதலீடு செய்ய அடுத்த சில வாரங்களில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு மளமளவென அதிகரிக்கத் தொடங்கியது.

இதனால், கடந்த ஒரு மாதத்திற்கு முன் உலக பணக்காரர்கள் பட்டியலில் 7ம் இடத்தில் இருந்த முகேஷ் அம்பானி, அடுத்தடுத்த இடத்திற்கு முன்னேற்றம் கண்டார். இந்நிலையில், புளூம்பெர்க் நேற்று வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியலில் ஐரோப்பாவின் நம்பர்-1 பணக்காரரான பிரான்சின் பெர்னார்ட் அர்னால்ட்டை முந்தி முகேஷ் அம்பானி 4வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். முகேஷின் மொத்த சொத்து மதிப்பு 80.6 பில்லியன் டாலராக (₹6 லட்சம் கோடி) உள்ளது. நடப்பாண்டில் மட்டுமே அவரது சொத்து மதிப்பு ₹1.65 லட்சம் கோடி அதிகரித்துள்ளது.

சரிந்த பெரும் தலைகள்

கடந்த சில வாரங்களில் டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க், ஆல்பாபெட் இணை நிறுவனர் லாரி பேஜ், உலகின் தலை சிறந்த பங்குச் சந்தை முதலீட்டாளர் வாரன் பபெட், ஸ்டீவ் பால்மர் போன்றவர்களை முகேஷ் பின்னுக்கு தள்ளி உள்ளார். இ-காமர்ஸ் துறையில் கவனம் செலுத்தத் தொடங்கியதில் இருந்தே அவரது வளர்ச்சி அசுரத்தனமாக இருந்து வருகிறது.

முதலிடத்தில் அமேசான் நிறுவனர்

* உலக பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பிசோஸ் ₹14 லட்சம் கோடியுடன் முதலிடத்தில் இருக்கிறார்.
* மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பில் கேட்ஸ், ₹9 லட்சம் கோடியுடன் 2வது இடத்திலும், பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பெர்க்  ₹7.65 லட்சம் கோடியுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.

Tags : Mukesh Ambani ,world ,Europe , Mukesh Ambani,tops Europe's,. 1 list, world's 4th richest
× RELATED இந்திய பெரும் பணக்காரர்கள்...