×

உரிமம் புதுப்பிக்க அலைக்கழிப்பு ஆட்டோவை தீவைத்து எரித்த டிரைவர்: ஆர்டிஓ அலுவலகத்தில் பரபரப்பு

அண்ணாநகர்: அயனாவரம் சோலை தெருவை சேர்ந்தவர் தாண்டமுத்து (43). சொந்தமாக ஆட்டோ வைத்து, சவாரி ஓட்டி வந்தார். இவர், தனது ஆட்டோவின் உரிமத்தை  புதுப்பிக்க கடந்த மார்ச் மாதம் அண்ணாநகரில் உள்ள ஆர்டிஓ அலுவலகம் சென்றுள்ளார். அப்போது, ஆதார் அட்டையில் முகவரி மாறி இருப்பதால், அதனை மாற்றி வரும்படி அங்கிருந்த அதிகாரிகள் அவரை திருப்பி அனுப்பி உள்ளனர். அதன்படி முகவரி மாற்றம் செய்து நேற்று மீண்டும் ஆர்டிஓ அலுவலகத்திற்கு ஆட்டோவை எடுத்து சென்றுள்ளார்.
அங்கிருந்த ஆய்வாளர், வேறு சில காரணங்களை கூறி அவரை திருப்பி அனுப்பி உள்ளார். இதனால், மனமுடைந்த தாண்டமுத்து, ‘‘ஏற்கனவே ஊரடங்கால் 3 மாதம் வருவாய் இன்றி தவித்து வரும் நிலையில், அதிகாரிகள் லஞ்சம் பெறுவதற்காக, பல்வேறு காரணங்களை கூறி தனது விண்ணப்பத்தை நிராகரிக்கின்றனர்,’’ என புலம்பியபடி, ஆர்டிஓ அலுவலகம் முன்பு நிறுத்தி இருந்த தனது ஆட்டோ மீது டீசலை ஊற்றி தீ வைத்தார். இதை பார்த்து, அங்கிருந்தவர்கள் அலறி ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்து, வில்லிவாக்கம்  தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் ஆட்டோ முழுவதும் எரிந்து நாசமானது.

தகவலறிந்து வந்த அண்ணாநகர் போலீசார், தாண்டமுத்துவை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது அவர் சுவரில் தனது தலையை மோதிக்கொண்டு கதறி அழுதார். அவரை சமாதானம் செய்து விசாரித்தனர். அப்போது, ஊரடங்கு தளர்வுக்கு பிறகு ஆட்டோ ஓட்டலாம் என கருதி, உரிமத்தை புதுப்பிக்க வந்தால், அதிகாரிகள் பணம் பெறும் நோக்கத்தோடு, என்னை அலைக்கழிக்கின்றனர். அதனால், மன உளைச்சலில் சோறு போட்ட ஆட்டோவை எரித்து விட்டேன். என் வாழ்க்கையே வீணாகிவிட்டது. இனி பிழைப்புக்கு என்ன செய்வேன், என கதறி அழுதுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : RTO , Driver , wave auto, renew license, RTO office commotion
× RELATED மேட்டூர் ஆர்டிஓ அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு