×

சாம்பியன்ஸ் லீக் காலிறுதியில் லியோன், மான்செஸ்டர் சிட்டி: வெளியேறியது ஜுவென்டஸ்

லிஸ்பன்: யுஇஎப்ஏ  சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் பிரான்ஸின் லியோன், இங்கிலாந்தின் மான்செஸ்டர் அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. கொரோனா பீதிக்கு இடையில்  ஐரோப்பாவின் முக்கிய கால்பந்து தொடரான யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் கால் இறுதிக்கு முந்தைய சுற்று 2ம் கட்ட ஆட்டத்தி இத்தாலியின் ஜுவென்டஸ் - பிரான்சின் ஒலிம்பிக்யு லியோன்  அணிகள் மோதின. ஏற்கனவே  நடந்த முதல் கட்ட போட்டியில் லியோன் 1-0 என வென்றிருந்ததால் ஜுவென்டஸ் கடும் நெருக்கடியுடன் களமிறங்கியது.

தொடக்கத்தில் இருந்து  ஜுவென்டஸ் ஆதிக்கம் செலுத்தினாலும், லியோன் அணியின் மெம்பிஸ் டெபாய் போட்டி தொடங்கிய 12வது நிமிடம் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்து முன்னிலைப்படுத்தினார். இதையடுத்து, ஜுவென்டஸ் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 43வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பிலும், 60வது நிமிடத்தில் பீல்டு கோலும் அடித்து அசத்த, ஜுவென்டஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. இரண்டு கட்ட ஆட்டங்களின் முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலை பெற்றிருந்தாலும், வெளியூரில் அதிக கோல் அடித்த எண்ணிக்கையின் அடிப்படையில்  லியோன் காலிறுதிக்கு முன்னேறியது. அதனால் இத்தாலியின் சீரி ஏ சாம்பியனான ஜுவென்டஸ், சாம்பியன்ஸ் லீக் தொடரில் இருந்து பரிதாபமாக வெளியேறியது.

மற்றொரு போட்டியில் இங்கிலாந்தின் மான்செஸ்டர் சிட்டி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தியது. மான்செஸ்டர் சார்பில் ஸ்டெர்லிங் (9’), கேப்ரியல் ஜீசஸ் (68’) கோல் போட்டனர். ரியல் மாட்ரிட் அணியின் பென்ஸிமா 28வது நிமிடத்தில் கோல் அடித்தார். இரண்டு கட்ட ஆட்டங்களின் முடிவில் 4-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்த மான்செஸ்டர் சிட்டி காலிறுதிக்கு முன்னேறியது.

Tags : quarter-finals ,Exit Juventus ,Lyon ,Manchester City ,Champions League , Lyon, Manchester City,Champions League ,quarter-finals, Juventus out
× RELATED யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் செமி பைனலில்...