×

காங்கிரஸ் மிரட்டுவதாக குற்றச்சாட்டு 6 பாஜ எம்எல்ஏ.க்கள் குஜராத்துக்கு மாற்றம்: தனி விமானத்தில் தூக்கிச் சென்றது

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் வரும் 14ம் தேதி சட்டப்பேரவை கூட்டம் நடைபெற நிலையில், பாஜ.வை சேர்ந்த 6 எம்எல்ஏ.க்கள் திடீரென குஜராத் மாநிலத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட் இடையே ஏற்பட்ட அதிகார மோதல் உச்ச நிலைக்கு சென்றதால், அங்கு குழப்பம் நீடிக்கிறது. கட்சி நடவடிக்கையின் கீழ் சச்சின் பைலட்டின் துணை முதல்வர், மாநில காங்கிரஸ் தலைவர் பதவிகள் பறிக்கப்பட்டன. இவரும், இவருடைய ஆதரவு எம்எல்ஏ.க்கள் 18 பேரும், அரியானாவில் பாஜ அரசின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சென்றபோதும் தனக்கு பெரும்பான்மை இருப்பதாக கூறி வரும் கெலாட், பெரும்பான்மையை நிருபிக்க பேரவையை கூட்ட அனுமதி கோரி ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவுக்கு கெலாட் கடிதம் அனுப்பினார். ஆளுநர் விதித்த சில நிபந்தனைக்கு உட்பட்டு வரும் 14ம் தேதி சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில், முதல்வர் அசோக் கெலாட் தனது பெரும்பான்மையை பேரவையில் நிருபிப்பதற்காக, தனது எம்எல்ஏ.க்களை விலைக்கு வாங்கக்கூடும் என்று பாஜ கருதுகிறது. இதனால், சந்தேகத்துக்குரிய 6 எம்எல்ஏ.க்களை தனது ஆட்சி நடக்கும் குஜராத் மாநிலத்துக்கு பாஜ நேற்று அவசரமாக தனி விமானம் மூலம் திடீரென அழைத்து சென்றது. அங்கு அவர்கள் போர்பந்தரில் உள்ள விடுதியில், பலத்த பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதே போல், ஏற்கனவே 12 பாஜ எம்எல்ஏ.க்கள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து பாஜ எம்எல்ஏ அசோக் லகோதி கூறுகையில், ``எம்எல்ஏ.க்களை தங்கள் கட்சியில் சேரும்படி காங்கிரஸ் துன்புறுத்துகிறது. மாநில நிர்வாகம், காவல்துறையை கொண்டு மிரட்டுகிறது. இதற்கு பயந்து அனைத்து பாஜ எம்எல்ஏ.க்களும் புனித யாத்திரை செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. குஜராத்தில் சோமநாதர் கோயிலுக்கு செல்ல இருக்கிறோம், என்று கூறினார்.

காங்கிரஸ் எம்எல்ஏ.க்களின் செல்போன் ஒட்டு கேட்பா?

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் மாவட்டம், ஜெய்சல்மாரில் உள்ள விடுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் அனைவரும் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பாஜ.வுக்கு ஆதரவான சில ஆதரவாளர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த எம்எல்ஏ.க்களில் 6 பேரின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. அதில், அவர்களின் செல்போன்கள் எண்களும் கொடுக்கப்பட்டு இருந்தன. இது குறித்து ராஜஸ்தான் டிஜிபி பூபேந்திர சிங் கூறுகையில், ``இது முற்றிலும் அடிப்படை ஆதாரமற்ற, தவறான தகவல். இந்த தகவலை பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது பற்றி உடனடியாக விசாரணை நடத்தும்படி, ஜெய்ப்பூர் கமிஷனர் ஆனந்த் வத்சவாவிற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது, என்றார்.

Tags : BJP ,Gujarat ,flight ,Congress , 6 BJP MLAs , Gujarat ,charges , intimidation , Congress
× RELATED சென்னையில் மோடி பிறந்தநாள் கோலாகலம்...