×

வந்தவாசி அடுத்த கீழ்நமண்டி கிராமத்தில் 2 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய மனிதர்கள் வாழ்ந்த தடயங்கள் கண்டெடுப்பு

திருவண்ணாமலை: வந்தவாசி அருகே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா, கீழ்நமண்டி கிராமத்தின் மலையடிவாரத்தில், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வாளர்கள்  கள ஆய்வு செய்தனர். அப்போது, கீழ்நமண்டி கிராமத்தின் தெற்குப்பகுதியில் உள்ள குன்றுகள் சூழ்ந்த இடத்தில், சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதர்களை புதைத்த ஈமக்காடு இருப்பது தெரியவந்தது. அங்கு, சுமார் 300க்கும் மேற்பட்ட கல் வட்டங்கள் காணப்படுகின்றன. இந்த கல் வட்டங்களின் நடுவில் மண்ணுக்கடியில் உள்ள ஈமப்பேழையில், இறந்த மனிதனின் எலும்புக்கூடுகள், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், மண் குடுவைகள், இரும்பு ஆயுதங்கள், பானைகள் ஆகியவற்றை வைத்து புதைத்திருப்பது தெரியவந்துள்ளது.

மனிதர்களை புதைத்த இடத்தை சுற்றிலும், வட்டமாக சிறு பாறைக்கற்களை பாதியாக புதைத்து அடையாளம் தெரியுமாறு வைப்பது அக்கால வழக்கம். அதன்படியே, இந்த பகுதியிலும் சுமார் 3 மீட்டர் விட்டம் முதல் 5 மீட்டர் விட்டம் வரை பல அளவுகளில் காணப்படுகின்றன. இது குறித்து, தொல்லியல் ஆய்வாளர்கள் க.ராஜன், சு.ராஜவேல் ஆகியோர் தெரிவித்திருப்பதாவது: கீழ்நமண்டி கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டவை, பெருங்கால கல்வட்டங்கள் ஆகும். சிறப்புக்குரிய குழிக்குறி பாறைகள் இந்த பகுதியில் நான்கு இடங்களில் உள்ளன. இதேபோல், தென்னிந்தியாவில் கர்நாடகத்திலும், தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, தர்மபுரி பகுதியிலும் கிடைத்திருக்கிறது.பெருங்கற்கால கல்வட்டங்கள், நெடுங்கல், குழிக்குறிபாறை, கருப்பு சிவப்பு வண்ண பானைகள், இரும்பு ஆயுதங்கள் மூலம், இரும்பு உருக்காலை இருந்ததற்கான அடையாளங்கள் ஆகும். எனவே, தமிழக அளவில் இந்த கண்டெடுப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்தது.தொல்லியல் துறையினர் முறையாக அகழாய்வு செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Tags : village ,Keelnamandi ,Vandavasi , Discovery of, traces ,human life, 2 thousand years ago, Keelnamandi , Vandavasi
× RELATED பாஜ கொடியுடன் சென்ற காரில் ₹2 லட்சம்...