×

அதிபரின் அதிகாரத்துக்கும் கட்டுப்படாத அலிபாபா குகை : பெய்ரூட் துறைமுகம் பற்றி அதிர்ச்சி தகவல்

பெய்ரூட்: உலகையை அதிர்ச்சியில் உறைய வைத்த வெடிவிபத்து நடந்த பெய்ரூட் துறைமுகம், லெபனான் அதிபரின் அதிகாரத்துக்கே கட்டுப்படாத பகுதி என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. ஊழல் தலைவிரித்தாடும் இந்த துறைமுகம், லெபானின் ‘அலிபாபா குகை’ என்றே அழைக்கப்படுகிறது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் கடந்த 4ம் தேதி மாலை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. துறைமுக கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட் திடீரென வெடித்ததால், அண்ைட நாடான சைப்ரஸ் வரை அதிர்ந்தது. இந்த விபத்தில் இதுவரை 155 பேர் பலியாகி இருக்கின்றனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலர் காணவில்லை. இந்த வெடிவிபத்தால் பெய்ரூட் நகர கட்டிடங்கள் சிதிலமாகி விட்டன.

இதனால், பல லட்சம் மக்கள் இடிந்த கட்டிடங்களில் வவ்வால்கள் போல் வாழ்க்கை நடத்துகின்றனர். ஏற்கனவே, கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் லெபனான், தற்போதைய சீரழிவில் இருந்து மீள்வதற்கு பல ஆண்டுகளாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பெய்ரூட் துறைமுகம் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. லஞ்சம் தலைவிரித்தாடும் இது, தனிக்காட்டு ராஜாவாக இருந்து வருகிறது. இங்கு பணியாற்றும் துறைமுக அதிகாரிகள், சுங்க அதிகாரிகள் தங்களில் வசூல் வேட்டையால், நாட்டின் மேல்மட்ட அதிகாரம் வரையில் கப்பம் கட்டி வந்துள்ளனர். லஞ்ச லாவண்யத்தால் கொழுத்துள்ள இந்த துறைமுகத்தை லெபானின் ‘அலிபாபா குகை’ என்ற அடைமொழியுடன் தான் அழைக்கின்றனர். இந்த துறைமுகத்தின் இந்த தனிக்காட்டு ராஜா செயல்பாடு, பெய்ரூட்டில் இந்நாட்டு அதிபர் மைக்கேல் ஆன் அளித்த பேட்டியின் மூலம் உறுதியாகி இருக்கிறது.

நேற்று அவர் அளித்த பேட்டியில், ‘‘கடந்த 2013ம் ஆண்டில் இருந்தே, பெய்ரூட் துறைமுகத்தில் 2,750 டன் அமோனியம் நைட்ரேட் இருந்துள்ளது.  அது ஆபத்தானது; அகற்ற வேண்டும் என்று அரசு தரப்பில் பலமுறை எச்சரிக்கை விடப்பட்டும் உள்ளது. எனினும், எங்கள் எச்சரிக்கையைத் துறைமுக நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. அமோனியம் நைட்ரேட் எங்கே வைக்கப்பட்டிருந்தது, அது எவ்வளவு ஆபத்தானது என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. துறைமுக நிர்வாகம் எங்கள்  கட்டுப்பாட்டிலும் இல்லை,’’ என்றார்.

எங்கிருந்து, எப்படி வந்தது?

கடந்த 2013ம் ஆண்டு ஜார்ஜியாவில் இருந்து மொசாம்பிக் நாட்டுக்கு கப்பல் மூலமாக 2,750 டன் அமோனிய நைட்ரேட் கொண்டு வரப்பட்டது. வழியில் கப்பலில் பழுது ஏற்பட்டதால், பெய்ரூட் துறைமுகத்தில் அனுமதி பெற்று நிறுத்தப்பட்டது. ரஷ்யாவைச் சேர்ந்த இந்த கப்பலின் உரிமையாளர், பொருளாதார நெருக்கடியில் இருந்ததால் உடனடியாகக் கப்பலை சரி செய்ய முடியவில்லை. ஆண்டுக் கணக்கில் தாமதமாகி விட்டதால், துறைமுக கட்டணத்தையும் செலுத்த வேண்டிய நிலைககு அவர் சென்றார். இதனால், கப்பலை அவர் கைவிட்டு விட்டார். இதனால், கப்பலில் இருந்த அமோனியம் நைட்ரேட்டை பறிமுதல் செய்து, துறைமுகத்தின் கீழ் உள்ள கிடங்கில் துறைமுக அதிகாரிகள் வைத்தனர்.

இதுவரை நடந்த விபத்துகள்

இதற்கு முன்பும் பல்வேறு நாடுகளில் அமோனியம் நைட்ரேட்டால், பல்வேறு வெடிவிபத்துகள் நடந்துள்ளன. அதன் விவரம் வருமாறு:
* கடந்த 1921ம் ஆண்டு  ஜெர்மனியில் அமோனியம் நைட்ரேட் வெடித்து ஏற்பட்ட விபத்தில், 500 பேர் பலியாகினர்.
* அமெரிக்காவில் 1947ல்  டெக்சாஸ் மாகாணத்தில் இருந்த தொழிற்சாலையில் அமோனியம் நைட்ரேட் வெடித்து, 581 பேர் பலியாகினர்.
* அதேபோல், 2015ம் ஆண்டு சீனாவின் டியான்ஜின் நகரில் அமோனியம் நைட்ரேட் வெடித்து, 173 பேர்  பலியாகினர்.



Tags : Alibaba Cave ,President ,Beirut ,Chancellor ,Shocking News ,Beirut Harbor ,Alibaba Cave Unconquered , Alibaba Cave ,Unconquered,Chancellor, Shocking News About Beirut Harbor
× RELATED சிரியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 22 பேர் பலி