×

தர்மபுரி துணை ராணுவ வீரர் காஷ்மீரில் கொரோனாவுக்கு பலி : செல்போனில் இறுதி சடங்கை பார்த்து குடும்பத்தினர் கதறல்

தர்மபுரி: தர்மபுரியை சேர்ந்த துணை ராணுவ வீரர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஜம்முவில் உயிரிழந்தார். அவரது உடல் குடும்பத்தினர் அனுமதியுடன் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கை செல்போனில் பார்த்து அவரது குடும்பத்தினர் கதறியழுதது உருக்கமாக இருந்தது. தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அண்ணல் நகர் பகுதியை சேர்ந்த சாமிக்கண்ணு- சின்னபாப்பா தம்பதியரின் 4வது மகன் மணிசங்கர் (35). இவருக்கும், சென்னையை சேர்ந்த நித்யா நந்தினிக்கும், கடந்த 5ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகனும் பெண் குழந்தையும் உள்ளனர். மணிசங்கர் கடந்த 2007ம் ஆண்டு பணியில் சேர்ந்து, தற்போது ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில், மத்திய பாதுகாப்பு படை வீரராக (சிஆர்பிஎப்) பணியாற்றி வந்தார்.

இவர், கடந்த மாதம் விடுமுறையில் சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு வந்துள்ளார். பிறகு, கடந்த ஜூலை 24ம் தேதி மீண்டும் ஸ்ரீநகர் முகாமிற்கு சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்தனர். இதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, மணிசங்கர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கடந்த 6ம் தேதி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு காரணமாக, அவரது சடலம் சொந்த ஊருக்கு கொண்டு வரப்படவில்லை.

அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களின் சம்மதத்துடன், ராணுவ மரியாதையுடன் நகர் முகாம் அருகே நேற்று முன்தினம் அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. மணிசங்கர் உடல் மற்றும் இறுதிச்சடங்குகள் ஆன்-லைன் மூலம் காண்பிக்கப்பட்டது. இதை பார்த்த மணிசங்கரின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர்.


Tags : soldier ,Corona ,Kashmir ,Dharmapuri , Dharmapuri paramilitary ,soldier kills Corona, Kashmir,Family roars,funeral ,cellphone
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...